சென்னை: 'மழைக்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், குடிநீரை காய்ச்சி பருகுவதுடன், எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள, வெளியே சென்று வந்ததும், கை, கால்களை, நன்னீரில் சுத்தம் செய்ய வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக, மாநிலம் முழுதும் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொது சுகாதாரத்துறை தகவல்படி, தினமும், 2 லட்சம் பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சலுடன் உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி பாதிப்புகளும் காணப்படுகின்றன. சிலருக்கு கடும் குளிர் காய்ச்சல் ஏற்படுகிறது. மழைக்கால காய்ச்சலுடன், எலிக்காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்க கூடும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தொடர் மழையால், பொது வினியோகத்தில் வழங்கப்படும் குடிநீர் மாசுபட வாய்ப்புள்ளது. அனைத்து குடிநீர் தொட்டி களிலும், போதிய அளவு குளோரின் கலந்து, குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், குடிநீரை நன்கு காய்ச்சி பருகுவது நல்லது. அதேபோல், மழைக்காலங்களில் சுழல் வடிவ நுண்ணுயிரியான, 'லெப்டோஸ்பைரா' எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும், எலிக்காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கும். இவை சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீர் வாயிலாகவும், குறிப்பாக எலிகளின் கழிவு வாயிலாகவும், மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது. எனவே, பொதுமக்கள், தேங்கியிருக்கும் மழைநீரில், வெறும் கால்களில் நடக்கக் கூடாது. தொற்று உள்ள உயிரினங்களின் கழிவுகள், மழைநீரில் கலந்திருக்கக் கூடும். அதில் கால் வைத்தால், நம் உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே, வெளியே சென்று வந்ததும், கை, கால்களை நன்னீரில் நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.