உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சமூக மாற்றங்களுக்கான ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

 சமூக மாற்றங்களுக்கான ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சமூக மாற்றங்களுக்கான ஆராய்ச் சிகளை மேற்கொண்டு திட்டங்களை வகுக்க, கல்வி நிறுவனங்களுக்கு மத்திய கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., எனும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, நாட்டில் வலுவான ஆராய்ச்சி சூழலை உருவாக்கும் நோக்கத்தில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை முன்னிறுத்தி, தற்போது மற்றும் எதிர்கால சமூக சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், சிறிய மற்றும் பெரிய ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்ள, கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதார மேம்பாடு, வர்த்தகம், மேலாண்மை, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், தேசிய பாதுகாப்பு, பாலின ஆய்வுகள், சமூக உளவியல், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆய்வுகள், கலாசார ஆய்வுகள், சமஸ்கிருத ஆய்வுகள், சமூக தத்துவ ஆய்வுகள் உட்பட 31 கருப்பொருட்களில் ஆய்வுகள் மேற்கொள்ள, ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., அழைப்பு விடுத்துள்ளது. இதில், சிறிய ஆராய்ச்சி திட்டங்கள் வகுக்க, 12 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக, 15 லட்சம் ரூபாய் அதிகபட்ச நிதி வழங்கப்படும். பெரிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு, 24 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு, 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என, மத்திய கல்வித்துறை தெரிவித்து உள்ளது. ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் கல்வி நிறுவனங்கள், https://icssr.org என்ற இணையதளத்தில், டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை