| ADDED : நவ 12, 2025 08:01 AM
மதுரை: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக பதிவான வழக்கில் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர் சிங் மனு செய்ததில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர் பல்வீர் சிங். வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக பல்வீர் சிங் உட்பட 14 போலீசார் மீது திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி., போலீசார் 2023ல் 4 வழக்குகள் பதிந்தனர். திருநெல்வேலி நீதித்துறை நடுவர் ( எண் 1) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக பல்வீர் சிங் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: அம்பாசமுத்திரத்தில் 2022 அக்., 18 ல் ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டேன். அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாகுடி, மணிமுத்தாறு போலீஸ் ஸ்டஷன்களுக்கு பொறுப்பு வகித்தேன். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தேன். அவர்களிடமிருந்து 130 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தேன். இதற்காக டி.ஜி.பி., பாராட்டி எனக்கு கடிதம் எழுதினார். நேர்மையாக பணிபுரிந்தேன். மக்களை பாதுகாக்க சமூக விரோதிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தவறான உள்நோக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழ் எனது தாய்மொழி அல்ல. குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எனக்கு கீழமை நீதிமன்றம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தமிழில் வழங்கியது சட்டப்படி ஏற்புடையதல்ல. என் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நீதிபதி சமீம் அகமது விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜரானார். நீதிபதி, ''போதைப்பொருளை பறிமுதல் செய்ததற்காக மனுதாரரை டி.ஜி.பி., பாராட்டியுள்ளார். எஸ்.ஐ., ஒருவரது புகார் அடிப்படையில் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்தது ஏன். இவ்வாறு செய்தால் அதிகாரிகள் யாரும் நேர்மையாக பணியாற்ற முன்வருவார்களா. வடமாநிலத்தை சேர்ந்த மனுதாரருக்கு தமிழில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது ஏன். மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட நேரிடும்,'' என எச்சரித்தார். பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றச்சாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி மனு செய்ய மனுதாரருக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் கூடுதல் விபரங்கள் பெற்று அரசு வழக்கறிஞர் நவ.21ல் தெரிவிக்க வேண்டும் என்றார்.