சென்னை:புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக, 'டிஜிட்டல் மேம்மோகிராபி, இ.சி.ஜி., கருவி, செமி ஆட்டோ அனலைசர்' உட்பட பல்வேறு வசதிகளுடன், நடமாடும் மருத்துவ வாகனம், 1.10 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் முதல் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பின், 40 கோடி ரூபாயில், அனைத்து மாவட்டங்களுக்கும், இவ்வாகனம் வழங்கப்படும். நேற்று தலைமைச் செயலகத்தில், அந்த வாகனத்தில் உள்ள வசதிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, அந்த வாகனத்தை துவக்கி வைத்தார். இவ்வாகனம், பெண்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். இது தவிர, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம்,ரத்த சோகை, இருதய நோய் போன்ற முக்கிய நோய்கள் தொடர்பாகவும், பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட 233 பேருக்கு, பணி நியமன ஆணையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.