| ADDED : டிச 07, 2025 02:07 AM
கோவை: கோவை மாவட்டம், சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால், மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள், நீர்வழித்தடங்களில் சட்ட விரோதமாக, 1.10 கோடி கன சதுர மீட்டர் அளவு மண் அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சட்ட விரோதமாக செயல்பட்ட 185 செங்கல் சூளைகளை மூட உத்தரவிட்டது. செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து, அதன் உரிமையாளர்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட் உத்தரவுப்படி, புதுடில்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்து, 3,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கலாம் என மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு பரிந்துரைத்தனர். அபராத தொகையை மறுபரிசீலனை செய்ய மாசு கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து, அபராத தொகை மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், சூழல் பாதிப்புகளுக்காக செங்கல் சூளைகளுக்கு, 900 கோடி ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.