உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணை எரித்ததாக வழக்கு தண்டனை பெற்றவர் விடுதலை

பெண்ணை எரித்ததாக வழக்கு தண்டனை பெற்றவர் விடுதலை

சென்னை:சேர்ந்து வாழ்ந்த பெண்ணை எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், திருமணமான நபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.கோவை மாவட்டம், குனியமுத்துார் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன்; திருமணமாகி குழந்தை உள்ளது. நான்கு ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளன; விவாகரத்தும் ஆகிவிட்டது. போதையில் வீட்டுக்கு வந்த வேடியப்பனிடம், அப்பெண் வீட்டு செலவுக்கு பணம் கேட்டதாகவும், அதனால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, தப்பி ஓடி விட்டதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில நாட்களுக்கு பின் பெண் இறந்ததாகவும், குனியமுத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சம்பவம், 2012 ஜூன் மாதம் நடந்தது.வழக்கை விசாரித்த கோவை செஷன்ஸ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட வேடியப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. தண்டனையை எதிர்த்து, வேடியப்பன் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.வேடியப்பன் சார்பில், வழக்கறிஞர் பி.எம்.சுபாஷ் ஆஜராகி, ''முதலில் சிகிச்சை அளித்த டாக்டர், 25 சதவீத தீக்காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், 55 சதவீத தீக்காயம் இருந்ததாக, போலீஸ் தரப்பில் சான்றிதழ் பெற்றுள்ளனர். சான்றிதழ் அளித்த டாக்டரை, போலீஸ் தரப்பில் விசாரிக்கவில்லை. மரண வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. நம்பத்தகுந்ததாக இல்லை,'' என்றார்.மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பெண்ணின் மரண வாக்குமூலம் உண்மையாக இருப்பதாக தெரியவில்லை. பெண்ணின் மரணத்துக்கான காரணத்தையும், இறந்த தேதியையும், போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை. இந்த ஆதாரங்களை வைத்து, வேடியப்பனை தண்டிக்க முடியாது. எனவே, தண்டனை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்