உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசாணையை வெளியிட்டு ஏமாற்றுகிறது: அரசு மீது மாற்றுத்திறனாளிகள் கோபம்

அரசாணையை வெளியிட்டு ஏமாற்றுகிறது: அரசு மீது மாற்றுத்திறனாளிகள் கோபம்

சென்னை: 'தமிழக அரசு, தொடர்ச்சியாக பயனற்ற அரசாணைகளை வெளியிட்டு, எங்களை ஏமாற்றி வருகிறது' என, மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித் தொகை, உதவி உபகரணம், வேலை வாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப, அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும் என்பது, மாற்றுத்திறனாளிகளின் நீண்ட கால கோரிக்கை. இதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடந்த 2008 மற்றும் 2023ல் வெளியான அரசாணைகளை செயல்படுத்தாமல், அரசு நடப்பாண்டு, புதிதாக ஒரு அரசாணையை வெளியிட்டு, தங்களை ஏமாற்றுவதாக, மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, பார்வை மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது: கடந்த 2008ல், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய, அரசாணை எண் 151 வெளியிடப்பட்டது. ஆனால், இன்று வரை அமல்படுத்தவில்லை. கடந்த அரசு துறைகளில் உள்ள, பின்னடைவு காலிப் பணியிடங்களை, சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு வழியே, மாற்றுத்திறனாளிகளை வைத்து நிரப்புவதாக, கடந்த 2023ல் முதல்வர் வாக்குறுதி அளித்தார். இதற்கான, அரசாணை 2023 ஜூலையில் வெளியிடப்பட்டது. அரசாணை வெளியாகி இரண்டு ஆண்டுகளாகியும், சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தப்படவில்லை. இதுகுறித்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், '2,000க்கும் மேற்பட்ட, காலி பின்னடைவு பணியிடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. விரைவில் தேர்வு நடத்தப்படும்' என, தெரிவித்தார். அவர் வாக்குறுதி அளித்து ஓராண்டான நிலையில், தற்போது அதிகாரிகள் ஏற்கனவே வெளியிட்ட, இரண்டு அரசாணைகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஒரு அரசாணை வெளியிட்டுள்ளனர். அதில், தற்போது தற்காலிகமாக அரசு பணியில் இருப்போருக்கு, அவரது பணி அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையால், யாருக்கும் பயன் ஏற்படவில்லை. புதிய அரசாணை, மாற்றுத்திறனாளிகளுக்குரிய, அனைத்து வகையான பணியிடங்களுக்கும் பயன் அளிப்பதாக இல்லை. எனவே, முதல்வர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, சிறப்பு ஆள் சேர்ப்பு தேர்வு நடத்தி, மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை