உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கர்நாடகாவுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஆலைக்கு சீல்

 கர்நாடகாவுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஆலைக்கு சீல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: கலப்பட நெய் தயாரித்து, கர்நாடகாவுக்கு சப்ளை செய்து வந்த, அவிநாசியில் உள்ள ஆலைக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக அரசின் கே.எம்.எப்., எனப்படும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் விற்கப்படுகின்றன. இந்த பெயரில் போலி மற்றும் கலப்பட நெய் சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலில், அம்மாநில போலீசார் வாகன தணிக்கை செய்து விசாரித்தனர். பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை, அக்ரஹாரா பகுதியில், ஒரு கிடங்கில் போலி கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்தது. பறிமுதல் இதுதொடர்பாக, மகேந்திரா, அவரது மகன் தீபக், கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்ற முனிராஜ், வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 1.26 கோடி ரூபாய், 8,000 லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சூழலில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரித்த போது, கலப்பட நெய், தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, போலீசார் கோவை மாவட்டம், பொள்ளாச்சி; திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் விசாரணை நடத்தினர். அவிநாசி, ஆலங்காட்டுப்பாளையம் ஒரு தோட்டத்து கிடங்கில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. கிடங்கை வாடகைக்கு எடுத்து, சிவகுமார் என்பவர், கலப்பட நெய் தயாரித்துள்ளார். கிடங்கை, மேலாளர் ரம்யா கவனித்து வந்தது தெரிந்தது. பெங்களூரு தனிப்படை போலீசார், அவிநாசி தாசில்தார் சந்திரசேகர், துணை தாசில்தார் கவுரி ஆகியோர் தலைமையில் கிடங்கில் சோதனை செய்தனர். அங்கிருந்த மிஷின், எண்ணெய், கலப்பட நெய், இரு வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கிடங்கிற்கு சீல் வைத்தனர். போலீசார் கூறுகையில், சிவகுமார், ரம்யா தலைமறைவாகி விட்டனர். இரு ஆண்டுகளாக அவிநாசியில் மிஷின்களை நிறுவி, கலப்படம் செய்து வந்துள்ளனர். விசாரணை 'நெய்யில், பாமாயில், டால்டா என கலப்படம் செய்து, அதை புழக்கத்தில் விட்டது தெரிந்தது. இந்த நபர்கள், தமிழகத்திலும், இதுபோன்று ஏதாவது கலப்படம் செய்துள்ளனரா என்ற கோணத்தில் உள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்' என்றனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சரவணகுமார் கூறுகையில், ''சிவகுமார் மூலம் பல்வேறு பகுதிகளிலும் கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்டதா என விசாரிக்கிறோம். கலப்பட நெய் சப்ளையானது தெரிந்தால், கடும் நடவடிக்கை பாயும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை