போதைப்பொருள் விற்ற வழக்கு: திரைப்பட தயாரிப்பாளர் கைது
சென்னை: போதைப்பொருள் வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர போலீசில் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நவம்பர் 19ல், பாடி பகுதியைச் சேர்ந்த தியா னேஸ்வரன், 26, என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் போதைப் பொருள் விற்றது தெரியவந்தது. திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் எனும், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி சரத், 30; முகப்பேர் பகுதியை ச் சேர்ந்த சட்டப்படிப்பு முடித்துள்ள சீனிவாசன், 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சர்புதீன், 44, என்பவரும் கைதானார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிம்புவிடம் உதவியாளராக பணியாற்றியது தெரியவந்தது. சரத் மற்றும் சர்புதீனை, திருமங்கலம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கும்பலில் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜ், 33என்பவர் இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து, தினேஷ்ராஜை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். அப்போது, சர்புதீனிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி உபயோகித்ததுடன், நண்பர்களுக்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இவர், நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்து வரும், லவ் ஓ லவ் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன், பிளாக்மெயில் என்ற படத்தை தயாரித்துள்ளார். இவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.