| ADDED : நவ 17, 2025 01:28 AM
சென்னை: தமிழகத்தில் முதல்முறை யாக, காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வகம் அமைக்கும் பணியை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துவக்கி உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பருவம் தவறிய மழை, குறைந்த நேரத்தில் அதிக மழை, கடலோர பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை சமீப கால சவால்களாக அமைந்துள்ளன. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, 500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என, 2021ல் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, காலநிலை மாற்றம் தொடர்பாக செயல் திட்டம் வகுப்பது, தனி நிறுவனம் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில், காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு அறிவியல் ரீதியிலான வழிகாட்டுதல்கள் வழங்க, புதிய ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2022ல், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகம் முழுதும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் சவாலாக உள்ளன. இதை எதிர்கொள்வதற்காக, முதல்முறையாக தமிழகத்தில் காலநிலை ஊடக ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிக்கு கலந்தாலோசகர் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த சில மாதங்களில், இதற்கான பணி இறுதி கட்டத்தை எட்டும். இந்த ஆய்வகம் அமைப்பதால், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள, உலக அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகள், தமிழகத்திலும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மட்டுமல்லாது, மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில், ஒவ்வொரு நிலையிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அறியவும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார்.