உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆதார் எண் இணைப்பில் சிக்கலா? மெயில் அனுப்ப ஐ.ஆர்.சி.டி.சி., அட்வைஸ்

 ஆதார் எண் இணைப்பில் சிக்கலா? மெயில் அனுப்ப ஐ.ஆர்.சி.டி.சி., அட்வைஸ்

சென்னை: 'ஐ.ஆர்.சி.டி.சி., ஆதார் எண் இணைப்பின் போது, சரியான விபரங்களை பதிவிடுங்கள். குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், இ - மெயில் அனுப்பி வைக்கலாம்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, ஆதார் அட்டை இணைப்பு முறையை, ரயில்வே அமல்படுத்தி உள்ளது. முடக்கம் அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த புதிய முறை, கடந்த 28ம் தேதி முதல் அமலில் இருக்கிறது. இதனால், ஐ.ஆர்.சி.டி.சி., பயனாளர்கள், தங்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஆனால், ஆதார் அட்டையில் இருக்கும் விபரங்கள், ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி., தகவல் பதிவில் உள்ள விபரங்களுடன் வேறுபட்டால், இணைப்பு ஏற்கப்படுவதில்லை. இதனால், பலர் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறுகையில், 'ஐ.ஆர்.சி.டி.சி.,யில் ஆதார் எண்ணை இணைக்கும் போது, எந்தவித காரணமும் இல்லாமல், பயனாளர் கணக்கு முடக்கப்படுகிறது. 'இதனால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்' என்றனர். அறிவுறுத்தல் இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: உண்மையான பயனாளர்களுக்கு, ரயில்வே டிக்கெட் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யில் பதிவு செய்துள்ள பயனாளி, தன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு இணைத்தால், தினமும் முன்பதிவு துவங்கும்போதே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், காலை 10:00 மணிக்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும். அதுபோல், தத்கால் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஏதாவது குறைபாடு காண்பித்தால், irctc.co.in. என்ற இ - மெயில் முகவரிக்கு, தகவல் அனுப்பலாம். கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரக்கணக்கான, இ - மெயில்கள் வருகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி