மேலும் செய்திகள்
காலி மது பாட்டில் திரும்ப பெற இனி கியூ.ஆர்., கோடு முறை
24 minutes ago
தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்கணும்
2 hour(s) ago
பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு கட்டாயம்: அன்புமணி
2 hour(s) ago
சென்னை: 'குழந்தைகளை எந்த சூழலிலும், கடைச் சரக்காக பெற்றோர் கருதக் கூடாது; அவர்களின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து, தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், கடந்தாண்டு கணவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 11 வயதான இரட்டை ஆண் குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி, கணவன் மற்றும் மனைவி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரு குழந்தைகளிடம் விசாரணை நடத்தி, திங்கள் முதல் வெள்ளி வரை தாயிடமும்; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையிடமும் இருக்க வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, கணவர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது சபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இரண்டு குழந்தைகளையும் வரவழைத்த நீதிபதிகள், அவர்களிடம் விரிவாக விசாரித்தனர். அப்போது, அவர்கள் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் உணர்வு ரீதியாக துன்புறுத்துவதால், தங்கள் தாயிடமே இருக்க விரும்புவதாக தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், இரண்டு குழந்தைகளையும் தாயிடம் ஒப்படைத்தும், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவுகளை தந்தை ஏற்கவும் உத்தரவிட்டனர். பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிறு குழந்தைகளை, பெற்றோரோ, நீதிமன்றங்களோ, வேறு எவரேனும், எந்த சூழ்நிலைகளிலும், கடைச்சரக்காக கருதக் கூடாது. தந்தை, தாய் இடையே கருத்து வேறுபாடு எழுந்து, குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பது என, வழக்கு வரும்போது, அவர்களின் உணர்வுகள், மனநலம், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகளின் நலனை, நீதிமன்றங்கள் உறுதி செய்து, அதன்படி, அவர்களை ஒப்படைக்கும் விவகாரத்தில், உத்தரவை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளை தாயிடமோ, தந்தையிடமோ ஒப்படைப்பது என்பது, பிரச்னைக்கு தீர்வு காணும் ஏற்பாடோ, பரிவர்த்தனையோ அல்ல. குழந்தைகளின் விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில், நாட்டின் முதுகெலும்பே குழந்தைகள்தான். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
24 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago