உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாக்காளர் பட்டியல் படிவம் நிரப்புவதில் குழப்பமோ குழப்பம் புரிந்தால் எளிதாக நிரப்பலாம் என்கிறது தேர்தல் கமிஷன்

 வாக்காளர் பட்டியல் படிவம் நிரப்புவதில் குழப்பமோ குழப்பம் புரிந்தால் எளிதாக நிரப்பலாம் என்கிறது தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதில், வாக்காளர்கள் இடையே பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன. அப்படிவத்தை புரிந்து கொண்டால், எளிதாக பூர்த்தி செய்யலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. படிவங்களை வழங்கிய ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவற்றை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை வாக்காளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை. இதனால், வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். படிவத்தில் சில கேள்விகளும் குழப்பம் அளிப்பதாக உள்ளன. மேலும், பல ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கே, அப்படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி என, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் எஸ்.தேன்மொழி கூறியதாவது: ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்படும். இரண்டையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் ஒன்றை, ஓட்டுச்சாவடி அலுவலரின் கையெழுத்து பெற்று, வாக்காளர்கள் வைத்துக் கொள்ளலாம். மற்றொரு படிவத்தில், புகைப்படம் ஒட்ட வேண்டிய இடத்தில் தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும். படிவத்தில் மூன்று பட்டியல் இடம் பெற்றுள்ளது. முதல் பட்டியலில், வாக்காளர் தன் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதில், தந்தையின் புகைப்பட அடையாள அட்டை எண் தெரியாவிட்டால், அதை பூர்த்தி செய்யாமல் விட்டு விடலாம். இரண்டாம் பட்டியலில், 2002 மற்றும் 2005ல் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, அதை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் விபரங்கள் 2002 திருத்தப் பட்டியலில் இல்லை என்றால் 2005ல் இருக்கும். அதனால் இரண்டில் எதில் விபரங்கள் இருக்கிறதோ அதை பயன்படுத்தி கொள்ளலாம். 2002 மற்றும் 2005ல் பட்டியலில் இடம்பெறாதவர்கள், அந்த பகுதியை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. அவர்கள் மூன்றாம் பட்டியலை பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாம் பகுதியை பூர்த்தி செய்தவர்கள், மூன்றாம் பகுதியை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. மூன்றாம் பகுதியில், உறவினரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தந்தை, தாய் விபரங்களை பூர்த்தி செய்யலாம். இப்பட்டியலில் சிலர் பெயர் என்பதில், வாக்காளர்களின் பெயரையே குறிப்பிட்டு விடுகின்றனர். அங்கு, தந்தை, தாய் பெயரை தான் குறிப்பிட வேண்டும். உறவினர் பெயரில், வாக்காளரின் தாத்தா அல்லது பாட்டி பெயரை குறிப்பிட வேண்டும். ஒரு சிலர் தாய் பெயரை குறிப்பிட்டால், தந்தை பெயரை, உறவினர் பட்டியலில் பூர்த்தி செய்யலாம். மேலும், 2002 மற்றும் 2005ம் ஆண்டில், தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை https://voters.eci.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், கணக்கீட்டு படிவம் அளித்த அலுவலரிடம் கேட்டு தெரிந்து பூர்த்தி செய்யலாம். சந்தேகங்கள் இருந்தால், ஒவ்வொரு படிவத்திலும், ஓட்டுச்சாவடி அலுவலரின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தீராத சந்தேகம்

தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, கணக்கீட்டு படிவம் வழங்குகின்றனர். அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி, மீண்டும் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில், தி.மு.க.,வினர் படிவங்களை வினியோகம் செய்வதுடன், பூர்த்தி செய்த படிவங்களை வாங்கிச் செல்கின்றனர். அவை முறையாக ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுமா, அதை முறையாக அலுவலர்கள் ஆய்வு செய்வரா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

இன்னும் வரவில்லை

தமிழகத்தில், 78 சதவீதம் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் பெரும்பாலானோர் தங்கள் பகுதிகளில் படிவங்கள் வினியோகம் வரவில்லை என்று, புகார் தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் படிவங்கள் கிடைப்பதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை