| ADDED : டிச 02, 2025 05:47 AM
தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என,மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். லோக்சபாவில் நேற்று நடந்த கூட்டத்தில், விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார் பேசுகையில், 'தமிழகத்தின் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான நியாயமான கூலி, நலத் திட்டங்களை நேரத்தில் வழங்க வேண்டும். தமிழக தேயிலைத் தொழிலாளர்களின் மொத்த நலனையும் மேம்படுத்த மத்திய அரசு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்' என்றார். இதற்குதொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர்சுச்ரீ சோபா கரண்ட்லாஜே அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டின் 'கூலித்தொகை சட்டத்தின்படி' தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிப்பதும் திருத்துவதும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பாகும். தொழிலாளர்களுக்கான கூலித் தொகைகள் தயாரிப்பாளர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் வழியாக நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த 2020ம் ஆண்டின் 'தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிபுரிதல் நிபந்தனைகள் சட்டம்' மற்றும் 'சமூக பாதுகாப்பு சட்டம்' ஆகியவற்றில், குடிநீர், கழிப்பிடம், மருத்துவப் பராமரிப்பு, அங்காடி, பாலுாட்டும் அறை, பொழுதுபோக்கு, வீடு, கல்வி போன்ற நலவசதிகளை உட்படுத்தி, தோட்டத் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நல வசதிகள் குறித்த பிரிவுகள் உள்ளன. மேலும், 2020ம் ஆண்டின் சமூக பாதுகாப்பு சட்டம், தோட்ட உரிமையாளர்கள், தங்கள் தொழிலாளர்களை ஊழியர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் பதிவு செய்ய தெரிவு செய்யக்கூடிய வகையில் ஏற்பாடுகளை வழங்குகிறது. தமிழகத்தை சேர்ந்த தேயிலை துறையையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்தமுன்னேற்றத்திற்காக, இந்திய அரசு தேயிலை வாரியம் மூலம் 'தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு இணை அமைச்சர் பதில் அளித்தார். - நமது நிருபர் -