சென்னை: 'சம்பா பயிர்களுக்கான காப்பீட்டு அவகாசம், வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் இதுவரை, 26.2 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, 6.27 லட்சம் விவசாயிகளால், 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது, மொத்த சாகுபடி பரப்பில், 57 சதவீதம். கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 10 லட்சம் ஏக்கர் பயிர் காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட, 27 மாவட்டங்களில், சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கு, நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழை, குறுவை அறுவடை, சம்பா நெல் நடவு பணிகளில் தாமதம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி காரணமாக, அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, சம்பா, தாளடி, பிசானம் பருவ நெல் பயிர்களுக்கான காப்பீட்டு தேதியை, வரும், 30ம் தேதி வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. வேளாண் துறை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி, பயிர் காப்பீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதுவரை சம்பா பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய வங்கிகள் வாயிலாக, வரும், 30க்குள் பதிவு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.