சென்னை: 'சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது, சரியான மொபைல் போன் எண்களை தெரிவிப்பது கட்டாயம்' என, பதிவுத் துறை அறிவித்துள்ளது. பத்திரங்களை பதிவு செய்ய, சார் - பதிவாளர் அலுவலக இணையதளத்தில், சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் தகவல்களை பதிவிட வேண்டும். முதல்கட்ட ஆய்வுக்கு பின், பத்திரங்கள் பதிவுக்கு நேரம் ஒதுக்கி, 'டோக்கன்' வழங்கப்படும். பெரும்பாலான மக்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாகவே தகவல்கள் பதிவிடும் பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செய்யும்போது, சொத்து வாங்கும் நபர்களின் மொபைல் போன் எண்ணுக்கு பதிலாக, ஆவண எழுத்தர், வழக்கறிஞரின் மொபைல் போன் எண்கள் பதிவிடப்படுகின்றன. இதனால், அந்த குறிப்பிட்ட பத்திரம் தொடர்பாக, சார் - பதிவாளர்கள், உரிய நபருக்கு தகவல்கள் தெரிவிக்க முடியாமல் போகிறது. மேலும், அந்த சொத்து தொடர்பான விபரங்களும் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்று, நகல் பிரதியை வெளியார் பெற்றால், அது குறித்து உரிமையாளருக்கு தெரிவிக்க, பதிவுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் படியாக, உரிமையாளர்களின் மொபைல் போன் எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 'ஸ்டார் 2.0' மென்பொருளில், பத்திரம் குறித்த தகவல்களை பதிவிடும் பகுதியில், புதிய கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உரிமையாளரின் மொபைல் போன் எண்ணை மட்டுமே, இங்கு குறிப்பிட வேண்டும். ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களின் மொபைல் போன் எண்களை குறிப்பிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, பதிவுத்துறை எச்சரித்துள்ளது.