சென்னை: 'பொது பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பீளமேட்டில், மில் தொழிலாளர்களுக்கு, கூட்டுறவு சங்கம் வாயிலாக வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இம்மனைகளுக்கு, 1968ம் ஆண்டு, சிங்காநல்லுார் நகராட்சி ஒப்புதல் அளித்தது. சாலை, தெருக்கள் போன்ற பொது பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, நகராட்சி வசம் ஒப்படைக்காமல், கூட்டுறவு சங்க அதிகாரிகள், அந்த நிலத்தை சங்க உறுப்பினர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மாற்றி அமைக்க முடியாது எனக் கூறி, அவை தொடர்பான அரசாணையை ரத்து செய்தார். நிலத்துக்காக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி வழங்க கூட்டுறவு சங்கத்துக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: பொது பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, வீட்டு மனைகளாக மாற்றி, விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, மூன்று மாதங்களில் கையகப்படுத்தி, கோவை மாநகராட்சி பராமரிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால், மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.