| ADDED : டிச 02, 2025 05:38 AM
சென்னை: ''அ.தி.மு.க.,விலி ருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்ற, பழனிசாமியின் கனவு நிறைவேறியது,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரைப்படியே நான் த.வெ.க.,வில் இணைந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி சொல்லி இருக்கிறார். அது அவர் கருத்து. ஆனால், சுய சிந்தனையின் பேரில் எனக்கு தேவையான முடிவை எடுத்திருக்கிறேன். இதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை. துாய்மையான ஆட்சியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் பின்பற்றினோம். அதனால்தான், எம்.ஜி.ஆர் இருக்கும் வரை, அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. ஜெயலலிதா, ஐந்து முறை முதல்வராக இருந்தார். ஆனால், கடந்த 2021ம் ஆண்டு பழனிசாமிக்கு, மக்கள் என்ன பதில் கொடுத்தனர் என்பது அவருக்கே தெரியும். நேற்று முன்தினம் கோபியில் பழனிசாமி நடத்திய பொதுக்கூட்டம் குறித்து, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்கிருந்தெல்லாம் ஆட்கள் கூட்டி வரப்பட்டனர் என்பது கோபி மக்களுக்கு தெரியும். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காகவே, பன்னீர்செல்வம், தினகரனிடம் பேசினேன். என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது, பழனிசாமி ஆசை. கச்சிதமாக அதை செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.