புதுச்சேரி: புதுச்சேரியில், நாளை மறுதினம் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு, பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதாக போலீசார் கூறினர். எனவே, நாளை மறுதினம், உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு, த.வெ.க.,வினர் மனு அளித்தனர். இதையடுத்து, டி.ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் ஆகியோர் அந்த மைதானத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு, ஹெலிபேடு மைதானத்தை ஆய்வு செய்து, பொதுக்கூட்டம் நடத்த, துறைமுக துறையிடம் அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை ஆனந்த் சந்தித்து, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்க கோரினார். இதைத் தொடர்ந்து, விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிப்பதாக, சீனியர் எஸ்.பி., கலைவாணன் நேற்று இரவு அறிவித்தார். போலீஸ் விதித்துள்ள நிபந்தனைகள் விபரம்: 1 விஜய் பங்கேற்கும் த.வெ.க., பொதுக்கூட்டத்தை காலை 10:30 முதல் மதியம் 12:30 மணிக்குள் முடிக்க வேண்டும். 2 கூட்டத்திற்கு 5,௦௦௦ பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; அவர்களுக்கு 'கியூ ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும்; பாஸ் உள்ளவர்களை மட்டுமே மைதானத்திற்குள் போலீசார் அனுமதிப்பர். 3 மைதானத்திற்குள் வி.ஐ.பி.,க்கள் வாகனங்கள் தவிர, பிற வாகனங்கள் அனுமதிக்கப்படாது. தொண்டர்கள் வாகனங்களை பழைய துறைமுகம், கடற்கரை மற்றும் இந்திராகாந்தி மைதானத்தில் நிறுத்த வேண்டும். 4 மைதானத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 5 மைதானத்தில் தொண்டர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக கூடுதலாக வழியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அனுமதியைத் தொடர்ந்து, பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் கட்டும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.