2035க்குள் அனைத்து வழித்தடங்களிலும் கவச் தொழில்நுட்பம்: ரயில்வே இலக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'ரயில்வேயில் அனைத்து வழித்தடங்களிலும், 2035ம் ஆண்டுக்குள், 'கவச்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்களின் வேகம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியை, விரைவு ரயில்கள் அதிகம் இயக்கப்படும் வழித்தடங்களில் படிப்படியாக கொண்டு வர வேண்டியுள்ளது. இதன்படி, மும்பை - டில்லி, டில்லி - ஹவுரா, சென்னை - பெங்களூரு உட்பட முக்கிய வழித்தடங்களில், 'கவச்' தொழில் நுட்பம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், 474 கி.மீ., துாரத்திற்கு, 150 கோடி ரூபாய் செலவில், தானியங்கி ரயில் பாதுகாப்பு முறை என்று கூறப்படும், 'கவச்' தொழில்நுட்பம் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை - ஆந்திர மாநிலம் கூடூர், சென்னை - அரக்கோணம் - ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வழித்தடங்களில், 'கவச்' பாதுகாப்பு முறை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்கள் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'கவச்' தொழில் நுட்பத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கி.மீ., துாரத்துக்கு, 'கவச்' தொழில்நுட்பம் அமைக்க, 50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதுவரை நாடு முழுதும், 5,900 கி.மீ., துாரத்துக்கு, 'கவச்' தொழில்நுட்பம் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதுவரை 2,100 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள், 10,000 கி.மீ., துாரம் ரயில் பாதைகளில், 'கவச்' தொழில்நுட்பம் நிறுவப்படும். 2035க்குள் நாடு முழுதும் அனைத்து வழித்தடங்களிலும், 'கவச்' தொழில் நுட்பம் கொண்டு வர, ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பயன்கள் என்னென்ன ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என மூன்றையும் இணைத்து உருவாக்கப்பட்டது தான், 'கவச்' தொழில்நுட்பம். ரயில் பாதையின் நடுவில், ஒவ்வொரு நான்கு கி.மீ., துாரத்தில், 'சிப்'கள் பொருத்தப்படும். இது, ரயில் ஓட்டுநர்களுக்கு, ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். ஒரே தடத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கை செய்வதோடு, தானாகவே, 'பிரேக்' அப்ளை செய்து, ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி, விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும். ரயில் ஓட்டுநர்களுக்கு உதவுவதுடன், ரயில் ஓட்டுநர்கள் செயல்பட தவறும் பட்சத்தில், தானாகவே பிரேக் போடும் வகையில், 'கவச்' வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்கும். அத்துடன், ரயிலை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட, அதிகமாக இயங்க அனுமதிக்காது.