ரேஷன் கார்டில் பெயர் மாற்ற நீக்கம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ்
சென்னை: 'ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற சேவைக்கு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என்ற உத்தரவை, நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து உணவு வழங்கல் துறை வாபஸ் பெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில், புதிதாக கார்டு கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டில், உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும், விண்ணப்பிக்கும் வசதி இருந்தது. இந்நிலையில், மேற்கண்ட சேவைகளை, ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறை, ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறை என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என, உணவு வழங்கல் துறை இயக்குநர், இம்மாதம் 4ம் தேதி உத்தரவிட்டார். உறுப்பினர் பெயர் நீக்க கட்டுப்பாட்டால், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் உருவானது. இது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம் நாளிதழில், இம்மாதம், 7ம் தேதி விரிவான செய்தி வெளியானது. அதனால், தற்போது ரேஷன் கார்டில், ஆண்டுக்கு இரு முறை மட்டுமே, முகவரி மாற்றம், உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் குடும்பத் தலைவர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற உத்தரவை, உணவு வழங்கல் துறை வாபஸ் பெற்றுள்ளது. அதற்கேற்ப, எப்போது வேண்டுமானலும் விண்ணப்பிக்கும் வகையில், இணையதள மென்பொருளில் மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் வரும் திங்கள் முதல் பெற முடியும்.