உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசுக்கும் அதே நிலைமை: தொடர்கிறது போராட்டத்திற்கு கோர்ட் அனுமதி வாங்கும் அவலம்

காங்கிரசுக்கும் அதே நிலைமை: தொடர்கிறது போராட்டத்திற்கு கோர்ட் அனுமதி வாங்கும் அவலம்

சென்னை:ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த, காங்கிரஸ் எஸ்.சி., பிரிவுக்கு அனுமதி வழங்கும்படி, மாநகர காவல் ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க, கடும் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, சென்னையில் ஏதாவது ஒரு இ டத்தில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில், 'மனுதாரர் அனுமதி கோரும் இடம், போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடமல்ல. 'எனவே, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. சிவானந்தா சாலை, ராஜரத்தினம் ஸ்டேடியம் ஆகிய இடங்கள் மட்டுமே போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்டவை என்பதால், இதில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து தெரிவித்தால், அனுமதி வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்க தயாராக இருப்பதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

அனுமதிக்க வேண்டும்

அதை ஏற்ற நீதிபதி, 'ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, மனுதாரர் உடனே மாநகர காவல் கமிஷனருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் கூறியதாவது: போலீஸ் அனுமதித்த இடமான ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருக்க, எங்களுக்கு விருப்பமில்லை. சத்தியமூர்த்தி பவன் முன், பாதசாரிகள் நடக்கும் சாலையோரத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டோம். போக்குவரத்து பாதிக்கும் என, போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே, தமிழக காங்., அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளே, காமராஜர் சிலைக்கு கீழே உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தற்போது, எந்த கட்சி போராட்டம் நடத்துவதாக இருந்தாலும் கோர்ட்டிற்கு சென்றுதான் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதே நிலைமைதான் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி