சென்னை: வாகனங்களுக்கான புதுப் பிப்பு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமியிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் நிர்வாகிகள் ராஜாமணி, யுவராஜ் ஆகியோர் கூறியதாவது: மத்திய போக்குவரத்து அமைச்சகம், கடந்த நான்கு ஆண்டுகளாக, 15 முதல் 20 ஆண்டுகளை கடந்துள்ள வாகனங்களை அழிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, பழைய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெறவும், புதுப்பிக்கவும் வசூலிக்கப்படும் கட்டணத்தை, மத்திய அரசு, 10 மடங்கு உயர்த்தி உள்ளது. இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சரக்கு வாகனங்களுக்கு தற்போதுள்ள புதுப்பிப்பு கட்டணம், 2,500 ரூபாய் என்பது 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வால், மோட்டார் தொழில் நலிவடைந்துள்ளது. மற்றொரு புறம், காப்பீடு கட்டண உயர்வால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்களுக்காக வாங்கப்பட்ட கடன்களை அடைக்க முடி யாமல், மாத தவணை களை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த தொழிலை நம்பியுள்ள ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மோட்டார் தொழிலையும், அதை சார்ந்துள்ள தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, பழைய வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.