சென்னை: கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவோரை களையெடுக்க, தமிழக பா.ஜ.,வில், மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி தலைமையில், ஐந்து பேர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, நான்கு மாதங்களே உள்ளன. எனவே, உட்கட்சி விவகாரம், கூட்டணி கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்பாக, பொது வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என, தமிழக பா.ஜ.,வினரை, அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. இருந்த போதும், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவேற்காடு மண்டலத்தை சேர்ந்தவரும், கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளருமான ஜானி ராஜா என்பவர், அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக கருத்து வெளியிட்டார். கூடவே, பா.ஜ., தலைமையின் செயல்பாடுகளை விமர்சித்தும் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து பதிவிட்டார். இதன் காரணமாக, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, நவ.,28ல், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நீக்கினார். 'கட்சி அடிப்படை விதிகளின்படி, தன்னை நீக்க, மாநிலத் தலைவருக்கு அதிகாரம் இல்லை; ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது. அடிப்படையான இந்த விஷயம் கூட தெரியாமல், நாகேந்திரன் என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்' என, ஜானி ராஜா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.,வில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, உறுப்பினர்களாக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலைசாமி, ராஜலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், குப்புராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே, பா.ஜ.,வினர் இரு குழுக்களாக பிரிந்து, மோதி வருகின்றனர். சமூக வலைதளம் வாயிலாக மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத்தான் ஜானி ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்திருக்கும் நாகேந்திரன் அடுத்தடுத்தும் நடவடிக்கைகளைத் தொடருவார்,'' என்றனர்.