சென்னை: 'டிட்வா' புயல் வெள்ளத்தால், சென்னை திரும்ப முடியாமல், இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் தவித்த, தமிழகத்தை சேர்ந்த, 40 மாணவ - மாணவியர், நேற்று முன் தினம் இரவு, பாதுகாப்பாக சென்னை திரும்பினர். சென்னை தாம்பரத்தில் செயல்படும், எம்.சி.சி., கல்லுாரியை சேர்ந்த, 22 மாணவியர் உட்பட 40 பேர், கடந்த மாதம் 22ம் தேதி, சென்னையில் இருந்து தனியார் விமானத்தில், இலங்கை வழியே, மலேஷியாவுக்கு சுற்றுலா சென்றனர். கடந்த 28ம் தேதி சுற்றுலாவை முடித்துக் கொண்டு, இலங்கை வழியே சென்னை செல்வதற்காக, இலங்கை வந்தனர். ஆனால், 'டிட்வா' புயல் காரணமாக, இலங்கையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அங்கிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக சென்னை வர முடியாமல், 40 பேரும், கடந்த மூன்று நாட்களாக கொழும்பு விமான நிலையத்தில், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவித்தனர். இது குறித்த தகவல், இலங்கையில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. துாதரக அதிகாரிகள், அவர்களை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்திடம் பேசி, மூன்று நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில், அவர்களை அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மாணவ - மாணவியரை, தமிழக அரசு சார்பில், அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.