உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் இடம் தேடும் பணியை துவக்கியது வாரியம்

துாத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் இடம் தேடும் பணியை துவக்கியது வாரியம்

சென்னை:துாத்துக்குடியில், 600 மெகா வாட் திறனில், புதிய அனல் மின் நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்யும் பணியை மின் வாரியம் துவக்கி உள்ளது.துாத்துக்குடி மாவட்டம் வ.உ.சி., துறைமுகம் அருகே, மின் வாரியத்திற்கு சொந்தமான துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 210 மெகாவாட் திறனில் ஐந்து அலகுகளில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம், 25 ஆண்டுகள். துாத்துக்குடி மின் நிலையத்தில் ஐந்து அலகுகளும், ஆயுட் காலத்தை தாண்டியும் சிறப்பான முறையில் இயங்குகின்றன.இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், தென் மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆலோசனை

துாத்துக்குடி துறைமுகத்தால், தென்மாவட்டங்களில், தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எனவே, அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதல் மின்சாரம் வினியோகம் மற்றும் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.இதற்காக, துாத்துக்குடி மாவட்டத்தில், புதிதாக, 600 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இந்த மின் நிலையத்தை, துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், 1,320 மெகா வாட் திறனில் அமைக்கப்படும் அனல் மின் நிலையம் அருகே அமைக்கலாமா அல்லது துாத்துக்குடி மின் நிலைய வளாகத்திலேயே அமைக்கலாமா அல்லது புதிய இடத்தில் அமைக்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:துாத்துக்குடி மின் நிலைய வளாகத்தில், பல நுாறு ஏக்கர் காலியிடம் உள்ளது.

சிரமம் இருக்காது

அங்கு ஏற்கனவே, அனல் மின் நிலையம் இருப்பதால், 600 மெகா வாட் திறனில், புதிய மின் நிலையம் அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம், அனுமதி பெறுவதில் சிரமம் இருக்காது.மின்சாரத்தை எடுத்து செல்லவும் வழித்தடங்கள் உள்ளன. எனவே, கூடுதல் செலவுகளை தவிர்க்க, துாத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்திலேயே, புதிய மின் நிலையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி