595 தகவல்கள் கேட்டு அதிரவைத்த நபர் நேரத்தை வீணடிப்பதாக ஆணையம் கண்டிப்பு
சென்னை:ஐ.பி.சி., சட்டத்தின்படி, 595 கேள்விகளை கேட்டு, தகவல் ஆணையத்தை அதிரவிட்ட நபருக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளது, மாநில தகவல் ஆணையம். சென்னை, தாம்பரம் அடுத்த குன்றத்துார் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். கடந்த 2023ல், பொது தகவல் அலுவலருக்கு, அவர் அனுப்பியுள்ள மனுவில், இந்திய தண்டனை சட்டமான ஐ.பி.சி.,யில் உள்ள, 32 பிரிவுகளில், அதன் உட்பிரிவுகள் சேர்த்து, 150 தகவல்களை கோரியுள்ளார். இதேபோல், அடுத்தடுத்து அனுப்பிய ஆறு மனுக்களில், ஐ.பி.சி., 128 பிரிவுகளில், அதன் உட்பிரிவுகள் சேர்த்து, 595 தகவல்களை கேட்டு, தகவல் ஆணையத்தை அதிர வைத்துள்ளார். நோக்கம் சிதைவு
இதுகுறித்து, சென்னை, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலக பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், 'மனுதாரர் கோரியுள்ள தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவின் நோக்கத்தை சிதைத்து, அலுவலக நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் உள்ளதால், பதில் அளிக்க இயலாது' என தெரிவித்து உள்ளார். அதையடுத்து, மனுதாரர் இது தொடர்பாக ஆணையத்திற்கு, ஆறு முறை இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்களை நிராகரித்து, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது சகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அளவுக்கு அதிகமான தகவல்களை கோரியுள்ளார் என தெரிகிறது. இவற்றை வழங்கும் பட்சத்தில், பொது அதிகார அமைப்பின் அன்றாட பணிகள் பாதிப்படையும் என, ஆணையம் கருதுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கவோ அல்லது குடிமக்களின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு ஊறு செய்யும் ஒரு கருவியாகவோ தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்க முடியாது
அதேபோல், அரசின் நேர்மையான அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக் கும் அழுத்தம் கொடுக்கவோ அல்லது அவர்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணிய வைக்கும் ஒரு கருவியாகவோ, இச்சட்டத்தை மாற்றுவதை அனுமதிக்க முடியாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தங்களுடைய அன்றாட பணிகள் பாதிக்கும் வகையில், தகவல் வழங்குவதையே பணியாகக் கொள்ளும் நிலைக்கு, பொதுத் தகவல் அலுவலர்கள் தள்ளப்பட்டு விடக் கூடாது; அது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கமும் அல்ல என, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.