உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்க்கு செங்கோட்டையன் விதித்த ஐந்து நிபந்தனைகள்

விஜய்க்கு செங்கோட்டையன் விதித்த ஐந்து நிபந்தனைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைவதற்கு முன்பாக, அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயை சந்தித்து பேசினார். அப்போது, செங்கோட்டையன் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை நிபந்தனையாக வைத்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதும், த.வெ.க.,வின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையனை தொடர்பு கொண்டார். த.வெ.க.,வில் சேர வலியுறுத்தி, பலமுறை போனில் பேசியுள்ளார். அப்போது, 'த.வெ.க.,வில் இணைய, ஐந்து நிபந்தனைகள் உள்ளன. அதை விஜய் ஏற்றால் மட்டுமே த.வெ.க.,வுக்கு வருவேன். அதற்கு முன், நடிகர் விஜயிடம் நேருக்கு நேர் பேச வேண்டும்; ஏற்பாடு செய்யுங்கள்' என, செங்கோட்டையன் சொல்ல, அடுத்த நாளே இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார் ஆதவ். இந்தத் தகவல் கிடைத்த பின், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். அதன்பின், சென்னையில் உள்ள விஜய் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினார். முதல் 45 நிமிடங்கள் பொதுவான அரசியலை பேசிய செங்கோட்டையன், அடுத்ததாக, தன் நிபந்தனைகள் குறித்து பேசியுள்ளார்.

செங்கோட்டையன் விதித்த நிபந்தனைகள்:

1. கொங்கு மண்டலத்தில், 60க்கும் கூடுதலான சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில், தற்போது அ.தி.மு.க.,தான் பலமாக உள்ளது. அடுத்த நிலையில் தி.மு.க., உள்ளது. அங்கு, அ.தி.மு.க., - தி.மு.க., அல்லாத ஒரு கட்சி எழுச்சி பெற வேண்டும். அந்தப் பகுதியில் அ.தி.மு.க.,வை வீழ்த்தி, த.வெ.க.,வை முன்னிலைக்குக் கொண்டுவர என்னால் முடியும். அதனால், கொங்கு மண்டலப் பகுதி முழுதையும் ஒருங்கிணைத்து செயல்படும் கட்சிப் பொறுப்பை என்னிடம் வழங்க வேண்டும் 2. த.வெ.க., சார்பில் கொங்கு மண்டலத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் தேர்வில் எனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். என் பரிந்துரையை ஏற்று வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, அது தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் 3. ஈரோடு மாவட்டத்தில், த.வெ.க., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் என் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும். வேட்பாளர் தேர்வின் போது அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் 4. வரும் 2026 ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு அல்லது கோபியில், த.வெ.க., தலைவர் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடத்த வேண்டும். அதில் மற்ற கட்சியினர் மிரளும் அளவுக்கு மாநாட்டை நடத்திக் காட்டுகிறேன். அதற்கு, கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க, தலைவர் என்ற முறையில் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் 5. சேலம் மாவட்டம் இடைப்பாடி, பழனிசாமியின் சொந்த தொகுதி. அதில் நிறுத்தப்பட விருக்கும் த.வெ.க., வேட்பாளரை, நான் தேர்வு செய்து தருவேன். தன் சுயலாபத்துக்காக அ.தி.மு.க.,வை அழித்துக் கொண்டிருக்கும் பழனிசாமியை, வரும் தேர்தலில் வீழ்த்தியாக வேண்டும். அதற்கு த.வெ.க.,வினர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, தேர்தல் களத்தில் பணியாற்ற வைக்க வேண்டும். இப்படி, விஜயிடம் ஐந்து நிபந்தனைகள் விதித்து செங்கோட்டையன் பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

அ.தி.மு.க.,வில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்த செங்கோட்டையனுக்கு, அக்கட்சியில், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நான்கு மாவட்ட அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு, 24 மணி நேரமும் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிகாரிகளின் உத்தரவை அடுத்து, செங்கோட்டையன் வீட்டுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக போலீசார் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை