உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உள்கட்டமைப்பு வசதியில்லாத பழங்குடியினர் பள்ளிகள்: ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி குற்றச்சாட்டு

 உள்கட்டமைப்பு வசதியில்லாத பழங்குடியினர் பள்ளிகள்: ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி குற்றச்சாட்டு

சேலம்: ''ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 2,000 ஆசிரியர் பணியிடங்கள், 1,000க்கும் மேற்பட்ட அடிப்படை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ''அத்துடன் உள்கட்டமைப்பு வசதியின்றி வைத்திருந்தால், மாணவர்கள் எப்படி பள்ளியில் சேர ஆர்வம் காட்டுவர்,'' என, சமூக பணியில் அரசு ஊழியர் சங்கத்தலைவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., சிவகாமி கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதில் சமூக பணியில் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளையும், விடுதிகளையும் இழுத்து மூடிவிட்டு, பள்ளி கல்வித்துறையோடு இணைக்க வேண்டும் என்ற நோக்கில், துறை அலுவலர்கள் செயல்படுகின்றனர். நான்கு ஆண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 2,000 ஆசிரியர் பணியிடங்கள், 1,000க்கும் மேற்பட்ட அடிப்படை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன் உள்கட்டமைப்பு வசதியின்றி வைத்திருந்தால், மாணவர்கள் எப்படி பள்ளியில் சேர ஆர்வம் காட்டுவர்? மற்ற மாணவர் விடுதிகளில் இல்லாதபடி, இப்பள்ளிகளில் மட்டும், மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால், இப்பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பி, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கியிருக்க வேண்டும். பழங்குடியினருக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், 40 சதவீதம், மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு ஒதுக்கப்படுகிறது. நிலம் எடுப்பு தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. இப்படி இருந்தால் பழங்குடியினரின் நலத்திட்டங்களுக்கு செலவு செய்ய நிதி எங்கிருக்கும்? தமிழக அரசில், 'குறைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என, கேட்க ஆட்கள் இல்லை. உயர் பதவியில் உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டு களையும் நடைமுறையே செயல்படுத்துவதில்லை. முதல்வரான பின் ஸ்டாலின் கூட, இக்கூட்டத்தை நடத்துவதில்லை. அதிகாரிகள் எப்படி செயல்படுத்துவர்? 'தாட்கோ' நிர்வாகத்தை இழுத்துமூடிவிடலாம். அத்தனை ஊழல், முறைகேடுகள் நடக்கின்றன. காசு கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தலைவர் தீத்தான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தலைவர் பூவலிங்கம், தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர், உரிமை பாதுகாப்பு சங்கத்தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை