| ADDED : ஆக 11, 2025 05:29 PM
சென்னை: எழுச்சி பயணத்தில் என்னுடைய கருத்துக்கள் மக்களிடையே சென்றுவிடக்கூடாது என திமுக பின்னிய சதிவலைகளை வென்றோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் என தென் தமிழக மாவட்டங்களின் மக்கள் அளித்த அன்பு மழையில் நனைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.அதன் முத்தாய்ப்பாக, சிவகாசி தொகுதியின் பட்டாசான வரவேற்பையும், தமிழகத்தின் மாபெரும் அரசியல் புரட்சியாக அதிமுக முதல் முறையாக மக்களுக்கான ஆட்சியை அமைத்த போது, எம்ஜிஆரை சட்டமன்றத்திற்கு பெருமையோடு அனுப்பி வைத்த அருப்புக்கோட்டை தொகுதி மக்கள், அதே பெருமையோடும், மாறா அன்போடும், இந்த இயக்கத்தின் மீதான பற்றோடும் எனக்கு அளித்த வரவேற்பையும் மகிழ்வோடு பெற்றேன்.என்னுடைய இந்த பயணத்தின் கருத்துக்கள் மக்களிடையே சென்றுவிடக் கூடாது என்பதற்காக திமுக பின்னிய பல்வேறு மடைமாற்று சதிவலைகளை வென்று, பை பை ஸ்டாலின் என்ற முழக்கம் விண்ணை எட்டும் அளவிற்கு எழுச்சிப்பயணத்தை வெற்றிப்பயணமாக்கிய தென்னகத்து மக்களை வணங்கி , எழுச்சிப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்து, இன்று மூன்றாம் கட்ட எழுச்சி பயணத்தை தமிழகத்தின் வட மேற்கு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து துவங்குகிறேன்.தமிழக மக்களின் ஆசியோடு, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். செல்லுமிடமெல்லாம் அன்பை வாரி வழங்கிய மக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக, அஇஅதிமுக-வின் நல்லாட்சி இருக்கும்.இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.