அபுதாபி: தீபாவளி பண்டிகையை உலகம் எங்கும் வசிக்கும் இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கோயிலுக்கு சென்றும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அங்கு பணி காரணமாக குடியேறினாலும், தங்களின் பாரம்பரியத்தை மறக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.யுஏஇ
யு.ஏ.இ.,யின் அபுதாபி நகரில் பிரமாண்டமான ஹிந்துக் கோயில் கட்டப்பட்டது. இதனை பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பு கட்டியது.800 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயிலை கடந்த பிப்.,மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இங்கு முதன்முறையாக தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. தரையில் ரங்கோலி வரையப்பட்டது.இந்த கொண்டாட்டத்தில் அங்கு வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகையை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கொண்டாட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரும் பாரம்பரியமான இந்திய ஆடைகளை அணிந்திருந்தனர். ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.யு.ஏ.இ.,யின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உலகம் முழுதும் தீபாவளி கொண்டாடுவோர் இதயங்களில் ஒளி நல்லிணக்கம்,இரக்கம் ஆகியவை பரவி உங்களை வழிநடத்தட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.புர்ஜ் கலீபா
யு.ஏ.இ.,யின் துபாயில் உள்ள உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீபாவில், பட்டாசு வெடிப்பது, வாண வேடிக்கை நிகழ்வது போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அத்துடன் '' இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், அமைதியையும் தரட்டும்'', என்ற வாசகமும் ஒளிபரப்பப்பட்டது.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.இதற்கு நெட்டிசன்கள் மகிழ்ச்சி தெரிவித்து திபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆஸி.,பிரதமர் மகிழ்ச்சி
ஆஸ்திரேலியாவிலும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். சிட்னி முருகன் கோயிலில் நடந்த கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ்பங்கேற்றார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இருளை ஒளி வெற்றிக் கொண்டதை குறிக்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சிட்னி முருகன் கோயிலில் தமிழ் சமுதாயத்தினருடன்இணைந்து தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறியுள்ளார்.கிரிக்கெட் வீரர்கள் கொண்டாட்டம்
மெல்போர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலத்தில் அதன் தலைவர் , நிர்வாகிகள், கிரிக்கெட் வீரர்கள் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து
வெள்ளை மாளிகையில் கடந்த 29 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜோபைடன் தலைமையில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஜோ பைடன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த தீபாவளியில் ஒளியின் திரளான சக்தியை காட்டுவோம். சுதந்திரம், ஜனநாயகத்திற்கான வெளிச்சம் இருக்கும் வரை அமெரிக்காவிற்கு எதுவும் சாத்தியம் எனக்கூறியுள்ளார்.கமலா ஹாரீஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அமெரிக்கா மற்றும் உலகம் முழுதும் உள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்களுடன் நாங்களும் சேர்கிறோம். தீமைக்கு எதிரான நன்மைக்கான போராட்டத்தையும், அறியாமைக்கு எதிரான அறிவையும், இருளுக்கு எதிரான ஒளியையும் கொண்டாடுகிறோம் எனக்கூறியுள்ளார்.குடியரசு கட்சி சார்பில் களமிறங்கி உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜோ பைடனும், கமலா ஹாரீசும் உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களை கைவிட்டுவிட்டனர். நாங்கள் ஹிந்து அமெரிக்கர்களை பாதுகாப்போம். உங்களின் சுதந்திரத்திற்காக போராடுவோம். எனது நிர்வாகத்தின் கீழ், எனது நண்பர் மோடியுடன் இணைந்து இந்தியா உடனான உறவை புதுப்பிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஜப்பான்
ஜப்பானின் ஹயோகோ பல்கலையில் இந்திய வம்சாவளி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இதில், அப்பல்கலை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தைவான்
தைவானில் உள்ள தைவான் இந்திய வம்சாவளி சங்கத்தினர் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில், ஏராளமான இந்தியர்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு இசை, நடன நிகழ்ச்சிகளுடன் வாண வேடிக்கை நடந்தது. பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கயானா நாட்டில் தீபாவளி விழா
தென் அமெரிக்காவில் உள்ள கயானாவின் மெமேராரா மேற்கு கடற்கரையில்தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டவர்கள், இசைக்கருவிகளை இசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மடகாஸ்கர்
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள மடகாஸ்கரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு தேசிய சட்டசபையின் துணைத் தலைவர் அகஸ்டின் குத்துவிளக்கேற்றினார்.தாய்லாந்து
தாய்லாந்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாய்லாந்து தீபாவளி கொண்டாட்டத்தை அந்நாட்டு பிரதமர் ஷின்ட்வாரா துவக்கி வைத்தார். நவ.,3 வரை நடக்கும் இவ்விழாவில், இந்தியாவின் பாரம்பரிய ஆன்மிக கலாசாரம் பிரதிபலிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக அந்நாட்டு அரசுக்கு, அந்நாட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.கனடா
கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை அக்.,25 அன்று கொண்டாடப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.தைவான்
தைவானில் முதல்முறையாக தைபே நகரில் தீபாவளி கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டினர், தைவானை சேர்ந்தவர்கள், இந்தியர்கள் கலந்துகொண்டனர். இதில் இசை நகழ்ச்சி, நடனம் இடம்பெற்றது.Galleryஇந்தியர்கள். இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கிந்தியத்தீவுகள், தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் தீவுகள், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தீபாவளி பண்டிகை வழக்கமான பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தியர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும், இந்திய துாதரகங்கள், துணை துாதரகங்கள் சார்பில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.