| ADDED : டிச 02, 2025 01:11 AM
டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரத ம ரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக அவருடைய கட்சியினர் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள மருத்துவமனையில், கடந்த மாதம், 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிறப்பு டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீரிழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்னைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 'அவருடைய உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை; தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது' என, அவருடைய கட்சியினர் தெரிவித்துள்ளனர். மூன்று முறை வங்கதேச பிரதமராக இருந்த கலிதா ஜியா, ஊழல் வழக்குகளில் சிக்கி, 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். கடந்தாண்டு ஆகஸ்டில், சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.