UPDATED : டிச 02, 2025 06:46 PM | ADDED : டிச 02, 2025 06:43 PM
இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமுடன் உள்ளார், ஆனால் அவரை மன ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்று அவரது சகோதரி உஸ்மா கான் தெரிவித்துள்ளார்.பாக். முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் மீது தொடுக்கப்பட்டன.அதில் பாக். தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.சிறையில் உள்ள அவர், கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் பேச்சுகள் எழுந்தன. இதையடுத்து, பாக். முழுவதும் இம்ரான் கட்சியினர் பெரும் கொந்தளிப்பில் இருந்ததோடு, போராட்டங்களிலும் குதித்தனர். அவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்று இம்ரான் கான் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர்.இந்த குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் மறுத்து வந்த நிலையில், இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட் மற்றும் அடியாலா சிறை வளாகம் முன்பு இம்ரான் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இம்ரான் உடல்நிலை எப்படி உள்ளது? சிறையில் உள்ளவரை காட்டுமாறு கூறி முழக்கங்களை எழுப்பினர்.போராட்டத்தில் இம்ரான் சகோதரிகளில் ஒருவரான உஸ்மா கான் பங்கேற்றார். நேரம் கடந்து செல்ல, செல்ல அங்கு பத்ற்றமான சூழல் காணப்பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் உள்ள சிறைக்குள் செல்ல உஸ்மா கானுக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஒருவழியாக எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி என்று நிருபர்களிடம் கூறியபடியே உஸ்மா கான் சிறை வளாகத்திற்குள் நுழைந்தார். சிறிது நேரம் கழித்து, சிறை வளாகத்தில் இருந்து வெளியே வந்த உஸ்மா கான், தமது சகோதரர் இம்ரான் கான் உயிருடன்தான் உள்ளார் என்று அறிவித்தார். ஆனால் மன ரீதியாக அவரை சிறைக்குள் சித்ரவதைக்கு ஆளாக்குவதாக கூறினார்.