உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / உறைய வைக்கும் பர்வத மலை பயணம்- மிஸ் பண்ணாதீங்க!

உறைய வைக்கும் பர்வத மலை பயணம்- மிஸ் பண்ணாதீங்க!

ஆன்மிகம், த்ர்ல்லிங்கான பயண அனுபவத்துடன் வார விடுமுறை கழிக்க விரும்புவோர்க்கு இந்த இடம் சூப்பர் சாய்ஸாக இருக்கும். ஆம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வத மலை பயணம் ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.மலைகளுக்கு எல்லாம் அரசன் என அழைக்கப்படும் இந்த பர்வத மலை திருவண்ணாமலையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆன்மிக சுற்றுலாவிற்கு முக்கிய இடமாகப் பார்க்கப்படும் இந்த மலை 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மலை அடிவாரத்திலிருந்து 1263 படிக்கட்டுகளைக் கடந்து சுமார் 3மணி நேரம் மலைப்பாதையில் பயணித்து மேல் பகுதியை அடையவது ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும். இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடி வழி என இருவழிகள் உள்ளன.

தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்லும் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத் தொடங்கலாம்.பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும், தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேருகின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாகக் காணப்படும். இதற்குக் குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த நீர் ஊற்று ஒன்று உள்ளது. இதில் நீரை எடுப்பதற்குக் கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக இந்த கடப்பாறை நெட்டு பார்க்கப்படுகிறது. ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்ல வேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூல ஸ்தானத்தில் உள்ள லிங்கம்,சிலைகளுக்குப் பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றைச் சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது.மலையேறுபவர்கள் தங்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மலைப் பாதையில் வழித் துணையாக நாய்கள் வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறது. 4560 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் உள்ளது.இது கி.பி. 3ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.இந்த மலைக் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாகப் பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதையும் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியது என்றும், சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரைச் சேமித்து வைக்கும் விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது. மேகங்களை உரசிச் செல்லும் உன்னத அழகையும், மேலிருந்து இயற்கை அழகையும், மூலிகை காற்றையும் உணரலாம். மலையின் அடிவாரத்தில் 24 மணி நேரமும், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் விடுமுறையைக் கழிக்க அமைதியான ஆன்மிகத்துடன் திர்லிங்கான மலையேற்றத்தை அனுபவிக்க விரும்பும் அனைவரின் முதல் சாய்ஸ் லிஸ்ட்டில் இந்த பர்வத மலையை வைத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை