காலாவதியான உணவு பொருட்களால் சர்ச்சை: பதிவை நீக்கிய பாகிஸ்தான் pakistan sends expired food meterial
டிட்வா புயல் மற்றும் அதி கனமழை காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 350க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட 400 பேர் மாயமாகி உள்ளனர். இலங்கை வரலாற்றில் இது மிகப்பெரிய மற்றும் சவாலான இயற்கை பேரிடர் என்று அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி உதவி வருகின்றன. பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண பொருட்களை, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் போட்டோ எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. அதில், தண்ணீர், பால், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பாக்கெட்கள் இருந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை சகோதார சகோதரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இது நமது அசைக்க முடியாத ஒற்றுமையை குறிக்கிறது என பாகிஸ்தான் தூதரகம் பதிவிட்டு இருந்தது. அந்த போட்டோவில் இருந்த நிவாரண பொருட்களின் சில பாக்கெட்களில் காலாவதி தேதி அக்டோபர் 2024 என காட்டியது. கழுகு பார்வை கொண்ட நெட்டிசன்கள் இதை கவனித்து, காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பி இருப்பதாக மார்க் செய்து பதிவிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக தாறுமாறான கமென்ட்கள் வந்து விழுந்தன. குப்பையில் போட வேண்டிய பொருட்களை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பி இருப்பதாக விமர்சித்தனர். அந்த பாக்கெட்டில் இருந்த பிஸ்கெட்கள் இலங்கையில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்களை ஒத்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஒருவர் உண்மையிலேயே இது பாகிஸ்தானில் இருந்துதான் வந்ததா என சந்தேகம் கிளப்பினார்.