உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) /  களம் காணப்போகும் அரசியல் வாரிசு தோழர் கட்சி தோள் கொடுக்குமா?

 களம் காணப்போகும் அரசியல் வாரிசு தோழர் கட்சி தோள் கொடுக்குமா?

''இ ப்பத்தான் எஸ்.ஐ.ஆர். பார்மை நிரப்பிக் கொடுத்துட்டு வர்றேன்'' சொல்லிக்கொண்டே வந்தாள் மித்ரா. ''மித்து... நீ லேட்; நான் அப்பவே கொடுத்துட்டேன்'' பெருமிதப்பட்டாள் சித்ரா. ''அக்கா... எஸ்.ஐ.ஆர். பணில வி.ஏ.ஓ. - ஆர்.ஐ. முக்கியப் பங்கு வகிக்கணும். ஆனா, நம்ம மாவட்டத்துல, இவங்கள்ல பெரும்பாலானோர் ஒத்துழைக்கறதில்லைன்னு அலுவலர்கள் குறைபட்டுக்கிறாங்க...'' ''மித்து... பி.எல்.ஓ.க் களுக்கு பணிச்சுமையை குறைக்க வாக்காளர் உள்பட எல்லாரோட ஒத்துழைப்பும் அவசியம்தான்... அவிநாசில எஸ்.ஐ.ஆர். பணிச்சுமையால, ஒரு அரசுப்பள்ளியோட ஆங்கில ஆசிரியை ஒருத்தரு துாக்க மாத்திரை சாப்பிட்டுட்டாங்களாம். தீவிர சிகிச்சைக்குப் பின் காப்பாத்திட்டாங்களாம். ''காலைல 6:30 மணிக்கெல்லாம் அங்க இருக்கிற அதிகாரிங்க கூப்பிட்டு ஊழியர்களை களத்துக்குப் போகச் சொல்றாங்களாம். கலெக்டர் வரப்போறாரு; ஆய்வு பண்ணப்போறாருன்னு பில்டப் வேறயாம். ''அக்கா... பணியை வேகமாக்கணும்ங்கற அக்கறையா இருக்கும்'' ''மித்து... நீ சொல்றது கரெக்ட்தான்; ஆனா, இது ஊழியர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கற அளவுக்கு மாறக்கூடாதுல்ல...'' சித்ரா சரியாகச் சொன்னாள்.

சரியான அட்வைஸ்

''மித்து... எஸ்.ஐ.ஆர். பார்ம் விஷயத்துல தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ.ன்னு கட்சிக்காரங்க ரொம்ப கவனத்தோட செயல்படுறாங்களாம். ஆனா, எந்த மோதலும் இல்லாம நடக்கிறது பெரிய விஷயம்'' ''ஆமாக்கா, நீங்க சொல்றது உண்மைதான்; மாநகராட்சி குப்பை விவகாரம் தொடர்பா அ.தி.மு.க. சார்புல ஆர்ப்பாட்டம் நடந்துச்சுல்ல... இதுல பேசுன நிர்வாகிங்க சிலர், முக்கிய நிர்வாகிகளா இருக்கிறவங்க எல்லாரும் முன்னாள் அமைச்சர்கள்தான். விரைவில் இவங்க மீண்டும் அமைச்சராகப் போறாங்கன்னு ஐஸ் வச்சுப் பேசியிருக்காங்க. ''இதுல குளிர்ந்துபோன முன்னாள் அமைச்சர்கள் அவங்களை முதுகில் தட்டிக்கொடுத்து மகிழ்ந்திருக்காங்க. ''ஆனா, மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சியார், வேற 'ஏங்கிள்'ள இதைப் பார்த்திருக்கார். அவரு ஐஸ் வச்சா மயங்கற ஆள் கிடையாதுல்ல. ''எஸ்.ஐ.ஆர். பணில பாலிடிக்ஸ் எல்லாம் பார்க்காம, கண்ணும் கருத்துமா மேற்கொள்ளணும். இறந்தவங்க பேரை நீக்கணும். தி.மு.க.காரங்க கள்ள ஓட்டு போடுறதுக்கு வாய்ப்பு ஏற் படுத்திடக்கூடாது. ''இல்லைன்னா, கடந்த எலக்ஷனைப் போல ஆயிடும். கவனமா இருங்கன்னு அட்வைஸ் பண்ணுனாராம்'' ''மித்து... எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பா ஆட்டோ விளம்பரத்துக்கு உத்தரவிட்டிருக்காங்க... கிராமப்புறங்கள்ல ஆட்டோ - மைக் வாடகைக்கு எடுத்தால் அதிகம் செலவாகும்ன்னு கணக்குப் பார்த்த ஆபீசர்ஸ், சில இடங்கள்ல பேட்டரி குப்பை வாகனங்களை இதுக்குப் பயன் படுத்தியிருக்காங்க.... ''ஏன்னா இந்த வாகனங்கள்ல ஏற்கனவே மைக் - ஸ்பீக்கர் எல்லாம் இருக்காம். வாகனமும் நல்லா இருக்குது... இதனால செலவு ரொம்ப மிச்சமாகுதாம்'' ''அதெல்லாம் கரெக்ட்தாங்க்கா. செலவுக்கணக்கு வேற மாதிரி எழுதாம இருந்தா சரிதான்'' கலகலத்தாள் மித்ரா.

மிரட்டும் ஆர்.ஐ.

''அக்கா... எஸ்.ஐ.ஆர். பணியால வருவாய்த்துறையினர் வருமானம், குடியிருப்பு சான்றுகள் வழங்கற பணில தொய்வு தெரியுதாம். ''விண்ணப்பிக்கிற மக்கள், பிரைவேட் ஆன்லைன் சேவை மையங்களுக்குப் போய்க் கேட்டா, எந்த ஆபீஸ்ல சர்டிபிகேட் வழங்கிற பைல் பெண்டிங்கா இருக்குங்கற தகவலை சொல்லிடறாங்க... ''தெற்கு தாலுகாவுல, ஒரு ஆர்.ஐ., இந்த ஆன்லைன் சென்டர்களுக்குப் போய், எங்க ஆபீஸ்லதான் பெண்டிங்னு மக்கள் கிட்ட சொன்னீங்கன்னா நடக்கறதே வேறேன்னு மிரட்டியிருக்காராம். ''நீங்க பெண்டிங்ன்னு சொல்றீங்க... அவங்க நேரா ஆபீசுக்கே வந்தர்றாங்க... ஏற்கனவே எங்களுக்கு வேலை கழுத்தை நெரிக்குதுன்னு டென்ஷனா பேசுனாராம்'' ''மித்து... நம்ம காளிமுத்து அண்ணன் மாதிரியே டென்ஷன் ஆனாராமா'' சிரித்தவாறே கேட்டாள் சித்ரா.

சேவல் சூதாட்டம்

''மித்து... ஊரக வளர்ச்சித்துறைல, சில ஒன்றியங்கள்ல, ஆபீசர்ேஸாட, மாஜி ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கைகோர்த்து கல்லா கட்றாங்களாம். ''குப்பை வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணி, தேங்குற குப்பையை அகற்ற வாடகைக்கு வாகனங்கள பயன்படுத்துறதுன்னு கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டறாங்களாம். இதுல மாஜி மக்கள் பிரதிநிதிகளுக்குப் போட்டியா ஆளும்கட்சி நிர்வாகிங்களே இருக்காங்களாம். ''அவங்கதான் இப்பப்பதவில இல்லையே. எங்களையும் கவனியுங்கன்னு மல்லுக்கட்றாங்களாம். இதனால, பி.டி.ஓ.க்கள் தவிக்கிறாங்களாம்'' ''சித்ராக்கா... அவிநாசி சப் டிவிஷன் பகுதில, சோஷியல் மீடியா மூலம் சேவல் சூதாட்டத்துக்கென குழு ஏற்படுத்தியிருக்காங்களாம். யார்கிட்டயெல்லாம் கட்டுச்சேவல் இருக்கோ, அவங்க பதிவிடறாங்களாம். ''குலுக்கல் முறைல சேவல்களைத் தேர்ந்தெடுத்து மோத விடறாங்களாம். இதுல பெரும்பாலானவங்க ஏற்கனவே சேவல் சூதாட்ட வழக்குல கைதானவங்கதான். ''போலீஸ் கண்டுக்கறதில்லையாம். உளவுப்பிரிவு போலீஸ்காரங்க வேலைபார்க்கறாங்களான்னே தெரியல'' மித்ரா ஆதங்கப்பட்டாள்.

'ஜில்'லென்ற ஏ.சி.

''மித்து... திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதில ஒரு முதியவர், வீட்டு மாடில நின்னுட்டு அரைகுறை ஆடையோட பெண்களைப் பார்த்து ஆபாச சைகைகள் காட்டறதோடு, ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசுறாராம். ''ஆரம்பத்துல கண்டுக்காம விட்ருக்காங்க... ஆனா, அவரோட அட்டகாசம் ஓவராயிருச்சாம். ''போலீசுக்கு இந்த தகவல் போனப்புறமும், நடவடிக்கை எடுக்கலையாம். கேட்டா அவரோட வீடு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியலேன்னு கூலா பதில் சொல்றாங்களாம்'' ''சித்ரா... சிட்டில கொங்கு பகுதி ஏ.சி. ஒருத்தர், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துற இடங்களுக்குப் போனாலும் ஜீப்பை விட்டு இறங்கவே மாட்டாராம். அதேமாதிரி ஆபீஸ்ல போனாலும் 'ஜில்'லுன்னுதான் அடைஞ்சு கிடப்பாராம். ''கேட்டா, அய்யா ஊட்டி மாதிரி இடத்துல ஒர்க் பண்ணுனவரு... வெயில் பட்டா ஆகாதுன்னு சொல்றாங்களாம்'' ''மித்து... எல்லாத்தையும் அந்த கணேசன் பார்த்துக்குவான்'' பூடகமாகச் சொன்னாள் சித்ரா.

எழுந்த புகைச்சல்

''மித்து... நம்ம ஊரு, டில்லி பிரதிநிதியோட வாரிசு 'மீசைக் கவிஞன்' பேரு கொண்டவரு இருக்கார்ல... 'நவீன'மான ஒரு அமைப்பு ஏற்படுத்தி, தத்துவ மழை பொழிஞ்சுட்டு வர்றாரு... அரசியல்வாதிகள் போல பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அமர்க்களப்படுத்துறாராம். ''இன்னைக்கு பிறந்த நாளாம் அவருக்கு... பல இடங்கள்ல போஸ்டர்கள் ஒட்டியிருக்காங்களாம். அரசியல் களத்துல வாரிசா களமிறங்கிற திட்டத்தோட இருக்கிறாராம்... ஆனா, 'தோழர்'கள் மத்தியில புகைச்சல் கிளம்பியிருக்கு... ஆனாலும், அவங்க அப்பா, அதையெல்லாம் சமாளிச்சு, தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்தி, வாரிசைக் களத்தில இறக்கிருவாருன்னுதான் தோணுது'' ''அக்கா... அந்தக்கட்சியில அதெல்லாம் நடக்காதும்பாங்களேக்கா...'' ''மித்து... பார்க்கத்தானே போறோம். தோழர் கட்சி தோள் கொடுக்குமா... கைவிரிக்குமாங்கறதை...'' புன்னகை பூத்தாள் மித்ரா.

குட்கா ஜோர்

''அக்கா... அவிநாசி நடுவச்சேரில அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு நிலத்தோட சந்தை மதிப்பு எட்டுக்கோடி ரூபாயாம். ஆனா இப்ப, 12.35 லட்சம் ரூபாய்ன்னு இதனோட மதிப்பு பதிவுத்துறை ஆவணங்கள்ல பதிவேற்றியிருக்காங்களாம். ''அறநிலையத்துறை கவனத்துக்கு கொண்டுபோனப்புறமும் கண்டுக்கலையாம். வழக்கம்போல, இதை ஆளும் கட்சிப் பிரமுகர்கள் யாராவது, இந்த நிலத்தைச் சொந்தமாக்கிக்கப்போறாங்களோ அப்படீன்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க'' ''எல்லாமே நடக்கும் மித்து... ஏன்னா, காலம் அப்படி. மாவட்டத்துல உணவுப் பாதுகாப்புத்துறைன்னு ஒன்னு இருக்கான்னே தெரியல'' ''என்னக்கா சொல்றீங்க...'' ''ஆமா மித்து...லேடீ ஆபீசர் இருந்தவரை ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தாங்களாம். டாஸ்மாக் கடை பக்கம் இருந்த குட்கா கடைகள் மேலயும் துணிச்சலா நடவடிக்கை எடுத்தார். ''இப்ப ஆறு மாசமா, மூடப்பட்ட கடைக்காரங்க எல்லாம் அபராதம் செலுத்தாமலேயே கடைகளைத் திறந்துட்டாங்களாம். குட்கா ஜோரா விற்பனையாகுதாம். ''அவிநாசி பக்கம், கர்நாடக அரசின் நந்தினி பிராண்ட்ல போலி நெய் தயாரிச்ச நிறுவனம் சிக்குச்சு... உள்ளூர் போலீஸ் உதவியோட, அந்த நிறுவனத்துக்கு 'சீல்' வச்சாச்சு... ஆனா, இதுகூட இங்க இருக்கிற உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு லேட்டாதான் தெரிஞ்சுதாம். ''ரோட்டோர கடைகள்ல சுகாதாரமற்ற முறையில உணவுத் தயாரிப்பு நடந்தாலும் கண்டுக்காமத்தான் இருக்காங்களாம்'' ''எல்லாம் வாங்க வேண்டியதை வாங்கியிருப்பாங்க அக்கா'' மித்ரா வெளிப்படையாகச் சொன்னாள்.

பிரேமலதா சமாதானம்

''அக்கா... சிட்டில, தே.மு.தி.க. பூத் முகவர் கூட்டத்துல பங்கேற்ற பிரேமலதா கிட்ட, ஒரு குரூப் தங்களைக் கூட்டத்துக்கு கூப்பிடலேன்னு கூப்பாடு போட்ருக்காங்க... ''இவங்களைச் சமாதானப்படுத்திய பிரேமலதா, இது சண்டை போடற நேரம் இல்லேன்னு சொன்னதோட, உழைச்சவங்க அத்தனை பேருக்கும் பதவி நிச்சயம். குறிப்பா உள்ளாட்சிப்பதவியைப் பெற முடியும்ன்னு கூல் படுத்தினாராம். ''கூட்டத்துல பேசும்போது, ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் மேம்பாலம் திட்டம், 2006ல துவங்கி, 48.25 கோடி ஒதுக்கப்பட்டு, அப்படியே இருக்கு. ரயில்வே கேட் மூடப்படறப்ப, வாகனங்கள் செல்ல, சூர்யா நகர்ல மேம்பாலம் கட்டணும்ன்னு சொன்னாராம். ''பாலம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டரை வருஷமாச்சு. திறக்கலேன்னு, 'அப்டேட்' செய்யப்படாத விவரங்களை பேசுனதால, கட்சிக்காரங்களே குழப்பமாயிட்டாங்களாம்'' ''மித்து... இதை கட்சிக்காரங்க தானே எழுதிக்கொடுத்திருப்பாங்க... இதை எழுதிக்கொடுத்த அந்த வல்லவருக்குத்தான் 'மாலை' போடணும்'' நக்கலாகச் சொன்னாள் சித்ரா.

அதிர்ச்சி

'வைத்தியர்' ''மித்து... வெள்ளகோவில்ல மருத்துவம் படிக்காமலே வைத்தியம் பார்த்துவந்த முதியவர் சிக்கினார்ல... ''நான் நாப்பது வருஷமா வைத்தியம் பார்த்துட்டுதான் இருக்கேன். திடீர்னு இப்ப வந்து சர்டிபிகேட் எல்லாம் கேட்கிறீங்களேன்னு அப்பாவியா ரெய்டு நடத்துன ஆபீசர்ஸ்ட்ட கேட்டாராம். ''வெள்ளகோவிலைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருத்தர்பேரை குறிப்பிட்டு அவருக்கே நான்தான் வைத்தியம் பார்த்தேன்னு சொல்லி போலி டாக்டர் மிரள வச்சாராம்'' ''சித்ராக்கா... பல்லடத்துல பஞ்சாயத்து செயலர்கள் பலபேரை திடீர்ன்னு டிரான்ஸ்பர் பண்ணுனாங்கள்ல... இதுல ஒரு செயலர், லேண்ட் வாங்கி குவிச்ச விஷயம் லீக் அவுட் ஆயிருக்கு... பைபாஸ் ரோட்டுக்கு லேண்ட் எடுக்கறப்ப 'ரத்தினமான' அவரோட லேண்டும் லிஸ்ட்ல வந்திருக்காம். அப்புறம்... பல்லடத்துல ஒரு ஆபீஸ்ல, விஜிலென்ஸ்ல சிக்காம இருக்க, டெய்லி, வீக்லின்னு கலெக்ஷன் ஏஜென்ட் எல்லாம் அப்பாய்ன்ட் பண்ணியிருக்காங்களாம்'' ''சரி மித்து... எங்க சொந்தக்காரங்க சப் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வரச்சொன்னாங்க... கிளம்பிட்டேன்'' சபை கலைந்தது. ''மாஜி அமைச்சர் ஒருத்தர்பேரை குறிப்பிட்டு அவருக்கே நான்தான் வைத்தியம் பார்த்தேன்னு சொல்லி போலி டாக்டர், ரெய்டுக்கு வந்த ஆபீசர்ைஸ மிரள வச்சாராம்'' 'அப்டேட் செய்யாத விவரங்களை பிரேமலதா பேசுனாங்களாம். இதை எழுதிக்கொடுத்த கட்சிக்கார வல்லவரு யாருன்னு தெரியல... அவருக்குத்தான் 'மாலை' போடணும்''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ