டாக்டரின் டைரி குறிப்பு
ஆகஸ்ட், 2, 2016: குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருந்த உமாவிடம், அவர் கணவர் சுரேஷ், நடுரோட்டில் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதாக, பார்த்த நண்பர் ஓடிவந்து சொல்ல, சுரேஷை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தான் வேலை செய்யும் வீட்டில், மருத்துவ செலவிற்கு கடன் வாங்கி வந்தார் உமா. இரண்டு குழந்தைகளுக்கு தாய். வீட்டு வேலை செய்பவர். உமாவை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சுரேஷ் அதிகப்படியாக குடித்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டு விட்டது. ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல் தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து, கல்லீரல் செயலிழந்து போவது, அல்சர், இதயவீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், நீரிழிவு, ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னை முதல் நிலையிலிருந்து ஐந்து நிலைகள் வரை இருக்கிறது. முதல்நிலை, கல்லீரல் பாதிப்பை கண்டறிய முடியாது. வேறு ஏதாவது பிரச்னைக்காக முழு உடல் பரிசோதனை செய்யும் போதுதான் தெரியும் கல்லீரலில் பிரச்னை உள்ளது என்று. மேலும் கொழுப்பினால், கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு ஃபேட்டி லீவர் (fatty liver) ஏற்படுகிறது. கல்லீரல் பாதித்து, சுருங்க ஆரம்பிக்கும்போது, அசதி, கால் மற்றும் வயிறு வீங்கும். இது தொந்தரவின் ஆரம்ப நிலை. மேலும் உணவுப் பாதைகள், ரத்த நாளங்கள் வீங்க ஆரம்பிக்கும். காரணம் கல்லீரல் சுருங்கச் சுருங்க கல்லீரலுக்கு போக கூடிய ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி, ரத்த குழாய்கள் உடலுக்குள்ளேயே வெடித்து, மலத்தில் ரத்தம் வருதல், ரத்த வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும். 90 சதவீதம் கல்லீரல் சுருங்கி, சரியாக செயல்படாததால், அசுத்த ரத்தம் மூளைக்கு சென்று, கோமா நிலை ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரகமும் செயலிழக்கும். இதுவே இறுதிநிலை. சுரேஷ் இந்த நிலையில்தான் இருந்தார். இந்நிலையில் நோயாளியை குணப்படுத்துவது என்பது கடினம். இரண்டு நாள் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் சுரேஷ் இறந்துவிட்டார். உமா அழவில்லை. இதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. உமாவிற்காக, சுரேஷ் துக்கத்தை தவிர, எந்த சந்தோஷத்தையும் தரவில்லை. 'வாழ்க்கையின் எத்தனை சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை, இப்போதுதான் உணர்கிறோம்' என்பதுதான் குடிபோதையிலிருந்து மீண்டவர்கள் தவறாமல் சொல்வது. காலம் கடந்த பின் வருந்துவதைவிட, மதுவுக்கு அடிமையாகாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.பொ. ராஜேஷ்பிரபுகுடல் மற்றும் இரைப்பை, கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்.அப்பல்லோ மருத்துவமனை,மதுரை.p.rajeshprabhu@gmail.com