டாக்டர் பி.வி.ரமணா, சர்வதேச நக்சல் வல்லுநர் நாடு முழுதும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்து இருக்கிறது. பாதுகாப்பு படைகளை சமாளிக்க முடியாமல், வன்முறையை கைவிட்டு ஆயுதங்களுடன் நக்சல் தலைவர்களும், நக்சல் இயக்கத் தினரும் கூண்டோடு சரண் அடைந்து வருகின்றனர். அதே நேரம், நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் தொலைத்த இயல்பு வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, அப்பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் வேகம் எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நக்சல்களை குறிவைத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை ஒருபுறம் நல்ல பலன்களை கொடுத்து வருகிறது. அதே சமயம் மாநில அரசுகளும் நல்லாட்சி கொடுத்தால் மட்டுமே, மீண்டும் நக்சல்வாதம் முளைக்காமல் இருக்கும். கொரில்லா படை ஜார்க்கண்ட் தலைநகர் ராய்ப்பூரில் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, 'வளர்ந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடைய வேண்டுமெனில், இடதுசாரி பயங்கரவாத பிரச்னைக்கு மிக விரைவாக தீர்வு காண்பது அவசியம்' என வலியுறுத்தி இருந்தார். அவரது இந்த கருத்தை மேம்போக்காக பார்த்து புறந்தள்ளிவிடக் கூடாது. ஏனெனில், பல மாநிலங்களில் நக்சல் இயக்கத்தினர் மெல்ல மெல்ல அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். சொல்லப் போனால், 25 ஆண்டுகளுக்கு முன், கடந்த 2000ம் ஆண்டில் சி.பி.ஐ., மாவோயிஸ்ட் மக்கள் விடுதலை கொரில்லா படை என்ற நக்சல் இயக்கத்தை நிறுவியது. அப்போது, அந்த அமைப்பின் வலிமை 9,000 ஆக இருந்தது. அவர்கள் அனைவருமே ஆயுதமேந்தி இருந்தனர். நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பின், அதாவது நடப்பாண்டில் அவர்களின் வலிமை 3,500 ஆக குறைந்திருக்கிறது. இதில் கவலையை ஏற்படுத்துவது என்னவெனில், நக்சல் ஆதரவாளர்கள் தான். அவர்களிடம் ஆயுதம் இல்லை; இருந்தாலும், எண்ணிக்கையில் பலம் பொருந்தியவர்கள்; 2 லட்சம் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். கடந்த 1970ம் ஆண்டு நக்சல்வாதம் ஒழிந்துவிட்டதாக நினைத்தபோது, வடக்கில் கண்ணையா சாட்டர்ஜி தலைமையிலும், தெற்கில் கொண்டபள்ளி சீதராமையா தலைமையிலும், சி.பி.ஐ., மாவோயிஸ்ட் என்ற பெயரில் மீண்டும் நக்சல் இயக்கம் உருவெடுத்தது. என்கவுன்டர்
அதன் பின், நக்சல் இயக்கம் படிப்படியாக வளர்ந்து, ஒன்பது மாநிலங்களில் உள்ள 157 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. தற்போது அவர்களை களையெடுக்கும் பணி மீண்டும் நடந்து வருகிறது. 2005ம் ஆண்டில், வடக்கு தெலுங்கானாவில் இருந்து நக்சல்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 2025ல் நக்சல்கள் தங்களது முக்கிய தலைவர்களை இழந்தனர். தென் மேற்கில் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஒடிஷா எல்லைகளிலும், கிழக்கில் மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்டிலும், வடக்கில் பஞ்சாப், ஹரியானாவிலும் நக்சல் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நக்சல் அமைப்பின் மத்திய கமிட்டியில், 49 பேர் மத்திய உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் பலர் என்கவுன்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். சிலர் ஆயுதங்களுடன் சரணடைந்து, தேசிய நீரோட்டத்தில் இணைந்து விட்டனர். இதனால், மத்திய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் எட்டாக குறைந்திருக்கிறது. இதனால், நக்சல்கள் வெளியேற்றப்பட்ட இடங்களில், புதிதாக வேறு ஒரு சமூக விரோத சக்திகள் ஆக்கிரமிக்கலாம் அல்லது 1970களில் நடந்தது போல நக்சல்வாதம் மீண்டும் துளிர்விடலாம். அதற்கு வாய்ப்பு தராமல் நக்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் என்பதை, பொட்டில் அடித்தாற்போல சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. இது தவிர, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நக்சல் பதுங்கியிருந்த இடங்களில் தொடர் கண்காணிப்பு அவசியம். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் முன்பை விட தீவிரமாக இருக்க வேண்டும். மனம் திருந்திய நக்சல் இதனால், அடுத்த ஓராண்டுக்குள் எஞ்சியிருக்கும் நக்சல் தலைவர்களும், அந்த அமைப்பினரும் முழுதாக அரசிடம் சரணடைந்து விடுவர். அதன் பின், மாநில அரசு எடுக்கும் நடவடிக்கை தான் மிகவும் முக்கியமானது. ஏனெனில், நக்சல் ஆதிக்கம் இருந்தவரை அந்த பகுதிகளில் போதிய சுகாதார வசதிகள் இருந்திருக்காது; வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் தலைவிரித்தாடி இருக்கும். இந்த பிரச்னைகளுக்கு மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அத்துடன் மனம் திருந்திய நக்சல் அமைப்பினரை, தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிடுவது அவசியம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்வதால், 'வளர்ந்த இந்தியா' என்ற கனவு நிச்சயம் நிறைவேறும்; அதற்கான காலமும் வெகு தொலைவில் இல்லை என்பதும் நிதர்சனம்.