உள்ளூர் செய்திகள்

தென்கொரியாவில் முதன்முறையாக "உலகளாவிய திருக்குறள் மாநாடு

தென்கொரியாவில் முதன்முறையாக 'உலகளாவிய திருக்குறள் மாநாடு' (ITCSK 2025) சேஜோங் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் பிறந்த நாளான நவம்பர் 8ம் தேதி இம்மாநாடு நடைபெற்றது.தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) ஏற்பாட்டில் 'காலத்தை கடந்த உண்மைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து மாநாட்டை சிறப்பித்தனர்.மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு பட்டயமும் கேடயமும் அளிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை அறிமுகப்படுத்தியதற்காகவும், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ஆறு இந்திய மாணவர்களுக்கு தென்கொரியாவில் ஆராய்ச்சி வாய்ப்பு வழங்கியதற்காகவும் இப்பாராட்டு அளிக்கப்பட்டது.விருதுகளும் பரிசில்களும்மாநாட்டில் தமிழ் இலக்கிய சேவையாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் 156 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய வி.ஜி. சந்தோஷத்திற்கு 'திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. 37 நூல்கள் படைத்த புதுமைத்தேனீ மா. அன்பழகனுக்கு 'உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது' வழங்கப்பட்டது.ரெவரென்ட் அல்போன்ஸ் மாணிக்கம், ஜங்கனம் கிம், யாங் கீ மூன், பேராசிரியர் ப. அருளி ஆகியோருக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா ரூ.6,000 பரிசுத்தொகையும், 12 கட்டுரைகளுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.சிறப்பு உரைகள்அல்போன்ஸ் மாணிக்கம் 'திருக்குறள் மற்றும் சமூக நீதி' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா), அலெக்ஸ் தேவராஜ் (பிரான்ஸ்), கவிஞர் சகாய டர்சியூஸ் பீ, டி. ஞானராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர்.முக்கிய தீர்மானங்கள்மாநாட்டில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தென்கொரியாவில் 'தமிழ் பண்பாட்டு மையம்' நிறுவுதல், இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திட்டம், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வி கூட்டு முயற்சி (MoU) ஆகியவை.புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவை சார்பில் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.எதிர்காலத் திட்டங்கள்:தமிழ்-கொரிய பண்பாட்டுப் பரிமாற்றம், தமிழ் மொழி வகுப்புகள், திருக்குறள் ஆய்வுகள், ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்துதல் போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.மாநாட்டு அமைப்பாளர்கள் பேராசிரியர் ஆரோக்கியராஜ் (தலைவர்), கவிஞர் சகாய டர்சியூஸ் பீ (துணைத் தலைவர்), முனைவர் ஞானராஜ் (செயலாளர்), சாந்தி பிரின்ஸ் (மக்கள் தொடர்பு) ஆகியோர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினர்.தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத நாட்டில் இத்தகைய மாநாட்டை நடத்தியது, தமிழ் மொழியின் உலகளாவிய வீச்சுக்கும் திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்துக்கும் சான்றாகும்.'தமிழ் வாழ்க! திருக்குறள் வாழ்க!'- தென் கொரியாவில் இருந்து சகாய டர்சியூஸ் பீ துணைத் தலைவர் (SKTRA}


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !