உள்ளூர் செய்திகள்

கனடா கால்கரியில் தீபாவளி கொண்டாட்டம்

'அன்பூஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு' என்னும் உலகப்பொதுமறையோன் வள்ளுவனின் குறளுக்கேற்ப, 'கால்கரி பாரதி கலை மன்ற'த்தின் (சி.பி.கே.எம்) தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேற்கு கனடாவில் உள்ள கால்கரி நகரில் சி.பி.கே.எம் என்னும் தமிழ் அமைப்பு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி தீபாவளி நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாடியது. கால்கரியில் உள்ள தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்டும் நோக்கத்தோடும் 2006ல் துவங்கப்பட்ட அமைப்பு இது. முன்னூறு தமிழ் மக்கள் இந்நிகழ்வில் பங்குபெற்றனர். தமிழுக்கு வந்தனம் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. இசை மற்றும் நடன நிகழ்வுகளில் சிறுவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேற்கத்திய நடனம் முதல் நம் பாரம்பரிய பரதம் வரை பல்வேறு வகையான நடன நிகழ்வுகள், பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் அனைவரும் பங்கேற்கும் விதமாக எளிமையான விளையாட்டுப் போட்டிகள் அமைந்திருந்தன. குழந்தைகளை குதூகலப்படுத்தும் மாறுவேடப் போட்டி, நம் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளைஞர்களின் உடல் வலிமைக்கு சவால்விடும் கயிறு இழுத்தல், தம்பதிகள் கலகலப்பாக கலந்துகொள்ளும் சைகை விளையாட்டு, சிறுவர்கள் சுறுசுறுப்பாக பங்குபெறும் 'மியூசிக்கல் சேர்' என பல நிகழ்வுகள் நடைபெற்றன. நட்பு வெள்ளத்தில் பொலிவு பெற்றிருந்த முகங்களுக்கு மேலும் பொலிவு சேர்த்தனர் முக ஓவியக் கலைஞர்கள். நண்பர்களும், குடும்பங்களும் சுயபடங்களும், குழுப்படங்களும் எடுத்துக் கொள்ள வசதியாக ஒரு சிறப்பு 'போட்டோ பூத்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் மற்றுமொரு அம்சம் டிஜே சிங்காரவேலனின் இசை. குழந்தைகளும், குழந்தைகளாக மாறிய பெரியவர்களும் இவரின் இசைக்கு அமர்க்களமாக ஆடி மகிழ்ந்தனர். மகிழ்ந்திருந்த தமிழ் உள்ளங்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக, வளாகக் கட்டிடத்திலேயே சுடச்சுட, சுவையான தீபாவளி சிறப்பு விருந்து தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. சமையல்கலை நிபுணர் விவேக்கின் கைவண்ணத்தில், அனைவரும் சிறப்பு விருந்தை திருப்தியாக உண்டு மகிழ்ந்தனர். நந்தா ராமசாமி, சுரேஷ் சேகர், பாவை தமிழ் புத்தகக்கடை, பல் மருத்துவர் டாக்டர் சுமனா ஆனந்த் மற்றும் டிவைன் பை ஆன்லைன் ஸ்டோர் - இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஸ்பான்சர்கள். போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், சி.பி.கே.எம் சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டன. இசை, விளையாட்டு, கொண்டாட்டம் மட்டுமின்றி சமூக சேவையும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இருந்தது. ரத்த தானம் மற்றும் ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 29ஆம் தேதி கால்கரியின் பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ரத்த தான நிகழ்வில், சி.பி.கே.எம் சங்கமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. - கனடாவிலிருந்து நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !