
ராகு, கேதுவிற்காக வலமிருந்து இடமாக சிலர் சுற்றுகிறார்களே...
ஆர்.ராஜ்மோகன், திண்டிவனம்
பிரகாரம் தவிர வேறெங்கும் சுற்றத் தேவையில்லை. நவக்கிரக சன்னதியை மட்டும் சுற்ற விரும்பினால் இடமிருந்து வலமாக சுற்றவும்.
கிளம்பும் போது அபசகுனம் குறுக்கிட்டால், என்ன செய்ய வேண்டும்?
ஆர்.லட்சுமி, நங்கநல்லுார்
பூனை குறுக்கே போவது, பல்லி விழுவது போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கு பயம் வேண்டாம். தண்ணீர் குடித்து விட்டு, இஷ்ட தெய்வத்தை மனதில் வணங்கியபின் செல்லலாம்.
* அனுக்ஞை விநாயகர் என்பவர் யார்?
இளங்கோ, மதுரை
'அனுக்ஞை' என்பதற்கு 'அனுமதி பெறுதல்' என பொருள். அன்றாட பூஜை, திருவிழா, கும்பாபிஷேகம் என எந்த வழிபாட்டை துவங்கினாலும் இவரிடம் அனுமதி பெற வேண்டும். கோயிலின் தென்மேற்கு மூலையில் இவரது சன்னதி இருக்கும்.
புண்ணியம் செய்தவர்கள் கஷ்டப்படுகிறார்களே...
சி.தங்கவேலாயுதம் வடவள்ளி
கலியுகத்தின் இயல்பு இது என்றாலும் புண்ணியம் செய்தவர் கஷ்டப்படுவது தற்காலிகமானதே. கடவுளின் கருணையால் நல்லவர் வாழ்வு மேம்படும்.
அக்னி ஹோத்ர ஹோமம் என்றால் என்ன?
கண.கணேசன் விருதுநகர்
வேதம் பயின்ற அந்தணர்கள் தினமும் செய்யும் ஹோமம் அக்னி ஹோத்ரம். அனைவரும் நலமாக வாழ சுயநலமின்றி, இதனைச் செய்வர். அந்தணர் வாழ்விற்கு தேவையான பொருளுதவியை மன்னர்கள் அக்காலத்தில் அளித்தனர்.
பிள்ளையார் சுழியுடன் எழுதுவதன் தாத்பரியம் என்ன?
ஆர்.சித்ரா, நெய்வேலி
'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திலிருந்தே எல்லா சொற்களும் தோன்றின. முதல் கடவுளான விநாயகர் பிரணவத்தின் வடிவம். சொற்களின் தோற்ற எழுத்தையும், அதன் வடிவான விநாயகரையும் வணங்கி, எழுதுவதே பிள்ளையார் சுழி. இதனால் செயல்கள் தடையின்றி நிறைவேறும்.
* அநியாயமாக சபிப்பவர்களிடமிருந்து தப்பிக்க என்ன வழி?
சி.கலா சென்னை
பயம் வேண்டாம். சபிப்பவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கு இழைக்கிறார்கள். அதற்கான விளைவு அவர்களை வந்தடையும். அவர்களின் மனம் திருந்த வழிபடுங்கள்.

