ADDED : டிச 07, 2018 11:53 AM

* வீட்டில் மாலையில் விளக்கேற்றும் நேரம் குறித்து...
ம.வாசுதேவன், பீடம்பள்ளி, கோவை
மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு விளக்கை அமர்த்தலாம்.
* வயதான பின்னர் தான் ஆன்மிக எண்ணம் அதிகரிக்குமா...
ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி
இல்லை. இளமைக் காலத்தில் ஆன்மிகத்தை ஏற்காதவர்கள் முதுமையில் படும் கஷ்டத்தை பார்த்தால் இளைஞர்களின் மனம் திருந்தும். இளமையில் இருந்தே பெரியவர்கள் காட்டிய ஆன்மிகத்தில் ஈடுபட்டால் எப்போதும் நலமாக வாழலாம்.
உழவாரப்பணி என்பதன் பொருள் என்ன?
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு
கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு 'உழவாரப் படை' என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர். எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை துாய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்.
ஐதீகம், மூடநம்பிக்கை இரண்டும் ஒன்றாக தோன்றுகிறதே...
எஸ்.சியாம்சுந்தர், கோவை
சாஸ்திரம் கூறும் நெறிமுறைகளை கடைபிடிப்பது ஐதீகம். சாஸ்திரத்தில் இல்லாத நம்பிக்கைகளைப் பரப்பி மக்களை அச்சுறுத்துவது மூடநம்பிக்கை. உதாரணமாக பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபடுவது ஐதீகம். ஆனால் அதன் காதில் வேண்டுதலைச் சொல்வது மூடநம்பிக்கை. இது போலத் தான் மற்ற விஷயங்களும்.
சாணத்திற்குப் பதில் சிலர் மஞ்சள்பொடியை கரைத்து வாசல் தெளிப்பது ஏன்?
பொன்னுலட்சுமி, அருப்புக்கோட்டை
பூஜைக்குரிய பொருளான மஞ்சளை காலில் படும்படி தெளிப்பது கூடாது. பசும்சாணம் தெளிப்பதே சிறந்தது. இதனால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
சனிப்பிணம் தனிப்போகாது என்கிறார்களே.... பரிகாரம் என்ன?
என்.ஆர்.நரசிம்மன், ஐயப்பந்தாங்கல்
பயம் வேண்டாம். இது போல் நடந்தால் பிரேதத்துடன் ஒரு விறகுக்கட்டையை வைத்துச் செல்வது சிறந்த பரிகாரம்.
விளக்கேற்றும் போது, புது சேலையில் தீப்பிடித்தால் அதை உடுத்தலாமா?
எஸ்.புஷ்பமாலா, பழைய பெருங்களத்துார்
தீப்பிடித்த ஆடைகளை உடுத்துவது கூடாது.
நிம்மதியாகத் துாங்க, எத்திசையில் தலை வைக்க வேண்டும்?
ஏ.ஜி.பானு, நெய்வேலி
கிழக்கே தலை வைத்து படுத்தால் தீய சிந்தனை வராது. மனம் ஒருநிலைப்படும். இஷ்ட தெய்வத்தின் திருநாமங்களை ஜபித்திருக்க, சிறிது நேரத்தில் துாக்கம் வரும்.

