
கே.கயல்விழி, ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி.
*வெள்ளிக்கிழமையன்று விளக்கைத் துலக்கலாமா?
ஞாயிறு, வியாழனன்று மட்டுமே துலக்குங்கள்.
கே.ஆனந்த், துவாரகா, டில்லி.
*பிரசாதம், அன்னதானம் - வேறுபாடு என்ன?
சுவாமிக்கு நைவேத்யம் செய்வது பிரசாதம் உணவை தர்மம் செய்வது அன்னதானம்.
சி.சந்தோஷ், அணைப்பட்டி திண்டுக்கல்.
*பாகவதம், பாகவதர் விளக்கம் தேவை.
பகவான் என்பது கடவுளைக் குறிக்கும். பகவானின் மகிமைகளை விளக்குவது பாகவதம். அதை மக்களிடையே பரப்புபவர்கள் பாகவதர்கள்.
எம்.கோகிலா, குன்றத்துார் காஞ்சிபுரம்.
*குழந்தைகளின் தங்க அரைஞாண் கயிற்றில் என்ன கோர்க்கலாம்?
நாய்க்காசு, தாயத்து, மாங்காய் காசுகளை கோர்க்கலாம்.
வி.கவிதா, உசிலம்பட்டி மதுரை.
*விரதமிருக்க ஏற்ற மாதம் எது?
எல்லா கடவுளுக்கும் விரதமிருக்க மார்கழி ஏற்றது. விநாயகர் - ஆவணி பெருமாள், அம்பிகை - புரட்டாசி, சிவபெருமான் ஐயப்பன் - கார்த்திகை மாதங்கள் ஏற்றவை.
வி.கேசவன், மாகடி பெங்களூரு.
*தேடிச் சென்று பிச்சை கொடுத்தால் புண்ணியம் சேருமா...
தேடிச் சென்று கொடுப்பது புண்ணியமே. இந்தியாவில் பிச்சைக்காரர் தொல்லை அதிகம் இருப்பதால் வெளிநாட்டினர் நம்மை கேலி செய்கின்றனர்.
ஓ.ரவிச்சந்திரன், சூலுார் கோயம்புத்துார்.
*தாத்தாவின் குணம் பேரனுக்கும், பாட்டியின் குணம் பேத்திக்கும் வருமா...
இதை பரம்பரை குணம் என்பார்கள். இப்படி குணம் வர வாய்ப்புண்டு. மாறவும் இடம் உண்டு.
டி.பவதாரிணி, திரிசூலம் சென்னை.
*பசுவின் கொம்பால் அபிஷேகம் செய்யலாமா...
தங்க கலசத்தை விட பசுவின் கொம்பால் அபிேஷகம் செய்வது உயர்வானது.
பி.வினோதினி, நத்தப்பட்டு கடலுார்.
*சந்திரசேகர் என்பதன் பொருள் என்ன?
சந்திரன் என்றால் 'நிலவு'. சேகர என்றால் 'தலையில் அணிவது'. பிறையைச் சூடியிருக்கும் சிவபெருமானுக்கு 'சந்திர சேகரன்' என்று பெயர்.
எல்.மகாதேவன், நாங்குநேரி திருநெல்வேலி.
*முருகனைப் போல் சிவனுக்கும் படைவீடு உண்டா?
முருகனுக்கு இருப்பது போல் சிவபெருமானுக்கு ஐந்து, ஏழு, எட்டு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் கோயில்கள் உள்ளன. உதாரணமாக சப்த(ஏழு) விடங்கம் (உளியால் செதுக்கப்படாத சிவலிங்கம் உள்ள கோயில்கள்) அட்ட(எட்டு) வீரட்டம் (வீரச்செயல் புரிந்த தலங்கள்) சிறப்பானவை.

