
பி.கண்மணி, மாதவரம், சென்னை.
*பெற்றோருக்கு பாதபூஜை செய்தால் பலனுண்டா?
பலன் உண்டு. பாவம் போகும். புண்ணியம் சேரும். தர்மத்தின் மீது பிடிப்பு உண்டாகும்.
எம்.மனோகரி, கூடக்கோவில், மதுரை.
*மனைவியுடன் இருக்கும் குபேரரை எங்கு தரிசிக்கலாம்?
பெரம்பலுார் மாவட்டம் ஆலத்துார் செட்டிக்குளம் மலை மீதுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மனைவி சித்ரலேகாவுடன் குபேரர் இருக்கிறார்.
கே.நாகராஜன், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.
*கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள்) சிவதீட்சை பெறலாமா?
கார்த்திகை சோமவாரத்தில் சிவதீட்சை பெறலாம்.
எம்.கிரிஜா, வடமணிப்பாக்கம், செங்கல்பட்டு.
*வீட்டிலுள்ள சுவாமி சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்யணுமா...
கற்சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். உலோகச் சிலைக்கு செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாளில் அபிஷேகம் செய்தால் போதும்.
கே.அபிநயா, நியூபாகலுார், பெங்களூரு.
*மல்லிகைப்பூவால் பைரவருக்கு அர்ச்சனை செய்யலாமா?
மல்லிகை, முல்லை உள்பட வாசனை பூக்களால் அர்ச்சனை செய்யலாம்.
சி.ராமையா, பணகுடி, திருநெல்வேலி.
*பறவை, விலங்குகளுக்கு பாவ, புண்ணியம் உண்டா?
பாவம் கிடையாது. புண்ணியம் உண்டு. அவை அறியாமையால் செய்த செயலையும் வழிபாடாக கடவுள் ஏற்கிறார். உதாரணமாக வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்ட குரங்கு மறுபிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்தது.
எல்.கந்தவேல், ஜவ்வாதுப்பட்டி, திண்டுக்கல்.
*பசுவின் கழுத்தில் மணி கட்டுவது ஏன்?
மணி ஓசை கேட்டதும் தெய்வமாக கருதி பசுவை வணங்குவதற்காக மணி கட்டுகின்றனர்.
கே.ராஜஷே், திருப்பனாம்பாக்கம், கடலுார்.
*மனிதனிடம் நேர்மை குறையக் காரணம் என்ன?
பணம், புகழ், அதிகாரத்திற்காக மனிதன் நேர்மை தவறி நடக்கிறான்.
வி.ரமா, ரஜோரி கார்டன், டில்லி.
*ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் பரிகாரம் செய்யணுமா?
ராகு காலத்தில் பிறந்தால் தோஷம் வராது. அதனால் பரிகாரம் செய்ய வேண்டாம்.
எம்.முருகன், மதுக்கரை, கோயம்புத்துார்.
*மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி?
எந்த இடத்தில் தவறு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தால் மனம் விழிப்படையும். தியானம் செய்யுங்கள். மனம் கட்டுப்படும்.

