
மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். மும்பையைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் மஹாபெரியவர் இருக்கும் வரை அங்கு தங்கியிருக்க விரும்பினார். அதற்காக நண்பர்களுடன் புறப்பட்டார்.
'பலரை அழைத்துக் கொண்டு செல்கிறோமே... தங்கவும், சாப்பிடவும் வசதி இருக்காதே?' என யோசித்து பலசரக்கு, பாத்திரங்களுடன் சமையல் ஆட்களுடன் சென்றார். அங்குள்ள சத்திரத்தில் அவர்கள் தங்கினர்.
ஒருநாள் ஆந்திராவில் இருந்து இரண்டு பஸ்சில் பக்தர்கள் வந்தனர். நெல்லிக்காய் மூடையை அவிழ்த்தது போல சரசரவென இறங்கினர். அனைவருக்கும் ஆசியளித்தார் மஹாபெரியவர். 'சாப்பிட்டீர்களா?' என கேட்ட போது அனைவரும் ஒருசேர, 'தங்களைத் தரிசிக்கும் ஆவலில் சாப்பாட்டை மறந்தோம்' என்றனர். நேரமாகி விட்டதால் முகாமிலும் சாப்பாடு இல்லை. தன்னைத் தரிசிக்க வந்த பக்தர்களைப் பசியோடு அனுப்புவாரா மஹாபெரியவர்?
அனைவரையும் பாலசுப்ரமணியம் தங்கி இருக்கும் சத்திரத்தை அடையாளம் சொல்லி அனுப்பினார். 'அங்கே போய் சாப்பிடுங்கள்' என்றார். அவர்களும் பாலசுப்ரமணியத்திடம் போய் சுவாமிகள் அனுப்பியதாக கூறினர்.
துாக்கி வாரிப் போட்டது அவருக்கு. காரணம் சாப்பாடு குறைவாகத்தான் இருந்தது. அத்துடன் அரிசி, பருப்பும் கையிருப்பு இல்லை. 'பசியோடு வந்தவர்களைக் காக்க வைக்க கூடாது. என்ன பண்றதுன்னே தெரியலை. நீங்கதான் கதி' என அன்னபூரணி, மஹாபெரியவரை பிரார்த்தித்தார். பகவானைப் பிரார்த்தித்துக் கொண்டு உணவை எடுக்கும் போது மேலும் மேலும் வளர்ந்தபடி இருந்தது. தெய்வஅருளும், குருவருளும் இருக்கும் போது மட்டுமே இது சாத்தியம்.
திரவுபதி ஒருமுறை துர்வாசருக்கும் அவரது சீடர்களுக்கும் இப்படித்தான் உணவு பரிமாறினாள். இது நடந்தது துவாபர யுகத்தில். ஆனால் கலியுகத்தில் பக்தர்களுக்கு இப்படி அருள் செய்திருக்கிறார் காஞ்சி மஹாபெரியவர். கொஞ்சமாக இருந்த உணவு, பதார்த்தங்களை பரிமாறத் தொடங்கினர். எல்லா பாத்திரங்களும் அமுதசுரபியாக, அட்சயப் பாத்திரமாக மாறின. அனைவரும் சாப்பிட்டு பாலசுப்ரமணியத்தை வாயார வாழ்த்தினர். உண்மையில் வாய் வாழ்த்தவில்லை... அவர்களின் வயிறு தான் வாழ்த்தியது. இதற்கு காரணம் சுவாமிகளின் அருள் அன்றி வேறென்ன...
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.
* கஷ்டம் தீர குலதெய்வத்திற்கு விளக்கேற்று.
* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.
* ஆடி, புரட்டாசி, தை அமாவாசை அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

