
பிருகு மகரிஷியின் தவத்தை ஏற்று அமிர்தவல்லி என்ற பெயரில் மகாலட்சுமி பிறந்த தலம் சென்னை மயிலாப்பூர். இங்குள்ள மாதவப்பெருமாள் கோயிலில் உள்ள இவரை வழிபட்டால் குறையில்லாத வாழ்வு அமையும்.
முனிவர்கள் சிலர் யாகம் ஒன்றை நடத்தி, அதன் பலனை சாந்த குணம் கொண்ட தெய்வத்துக்கு அளிக்க விரும்பினர். அந்த பொறுப்பு பிருகுமகரிஷியிடம் தரப்பட்டது. அதற்காக அவர் வைகுண்டம் சென்ற போது, திருமால் உறங்குவது போல நடித்தார். 'நான் வந்திருப்பது தெரிந்த பின்னும் உறங்குகிறீரே?' என திருமாலின் மார்பில் உதைத்தார் பிருகு. ''நீங்கள் வந்ததை உணராமல் உறங்கியது தவறு தான்'' என சாந்தமாக தெரிவித்தார் திருமால். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி பாற்கடலில் இருந்து வெளியேறினாள்.
இதனால் வருந்திய பிருகுமகரிஷி தவத்தில் ஈடுபட்டார். மகாலட்சுமியே மகளாக பிறக்க வேண்டும் என வேண்டினார். மனமிரங்கிய மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக பிறக்க 'அமிர்தவல்லி' எனப் பெயரிட்டு வளர்த்தார். மகள் திருமண வயதை அடைந்ததும், திருமாலிடம் திருமணம் புரியும்படி வேண்டினார். அவரும் சம்மதிக்க இத்தலத்தில் 'கல்யாண மாதவன்' என்ற பெயருடன் கோயில் கொண்டார்.
இங்குள்ள தீர்த்தமான சந்தான புஷ்கரணியில் மாசி மகத்தன்று அமிர்தவல்லித்தாயார் சுவாமியுடன் எழுந்தருள்வார். அப்போது குழந்தை வரம் வேண்டி தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் சேர்த்த கலவையை நைவேத்யம் செய்வர். பிரகாரத்தில் பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
முதல் ஆழ்வார்கள் மூவரில் ஒருவரான பேயாழ்வார் இங்குள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில் ஐப்பசி சதயத்தில் பிறந்தார். பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவருக்கும் திருக்கோவிலுாரில் (விழுப்புரம் மாவட்டம்) திருமாலை சந்தித்த நிகழ்வை முன்னிட்டு 'திருக்கோவிலுார் வைபவம்' இங்கு நடக்கிறது.
எப்படி செல்வது: சென்னை மயிலாப்பூர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ளது.
விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம் ஆடிப்பூரம், நவராத்திரி மாசித்தெப்பம், பங்குனி உத்திரம்
நேரம்: காலை 6:30 - 11:00 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94440 18239, 044 - 2498 5112, 2466 2039
அருகிலுள்ள தலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 044 - 2464 1670

