/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வீட்டுக்கு விளக்குடன் வாங்க! விரைவில் குறைதீரும் பாருங்க!
/
வீட்டுக்கு விளக்குடன் வாங்க! விரைவில் குறைதீரும் பாருங்க!
வீட்டுக்கு விளக்குடன் வாங்க! விரைவில் குறைதீரும் பாருங்க!
வீட்டுக்கு விளக்குடன் வாங்க! விரைவில் குறைதீரும் பாருங்க!
ADDED : மார் 10, 2017 12:48 PM

மார்ச் 12 மாசி தெப்பத்திருவிழா
மாசிமகத்தை ஒட்டி திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற, தெப்பக்குளக்கரையில் ஏற்றும் விளக்குகளை எடுத்து வீட்டுக்கு எடுத்து வந்து வழிபாடு நடத்துவார்கள்.
தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். இதனால், அவனது அட்டூழியம் அதிகரித்தது. அவனை அழிப்பதற்காக பூலோகத்தில் கதம்ப மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்திற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் தலைமையில் சப்தரிஷிகள் திரண்டு கோஷ்டியாக வந்தனர். இதனால் அந்த இடம் 'திருக்கோஷ்டியூர்' எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் விஷ்ணு சவுமிய நாராயணப் பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
விளக்கு வழிபாடு: திருமணத்தடை, குழந்தைப் பேறு, பிரிந்த தம்பதி ஒன்று சேர்தல், வீடு, நகை வாங்குதல், நோய் குணமாதல், மன ஆறுதல் என எந்த கோரிக்கையாக இருந்தாலும், அது நிறைவேற தெப்பத்திருவிழாவன்று, இங்குள்ள குளக்கரையில் பக்தர்கள் ஏற்றி வைத்த தீபத்தை, வீட்டுக்கு எடுத்து வர வேண்டும். அந்த தீபத்தை பூஜையறையில் வைத்து. கோரிக்கை நிறைவேறியதும், அந்த விளக்கோடு புதிய விளக்கு ஒன்று வாங்கி அடுத்த ஆண்டு மாசி மக விழாவில், குளக்கரையில் ஏற்றி வைக்க வேண்டும். இந்த இரண்டும் மற்றவருக்குப் பயன்படும்.
இவ்வாறு நம் கோரிக்கை நிறைவேறுவதோடு, மற்றவர் கோரிக்கை நிறைவேற வழிவகுப்பதால் புண்ணியமும் கிடைக்கும். நமக்கு கிடைத்த நன்மை பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல கருத்து இந்த விழா மூலம் பக்தர்களுக்கு போதிக்கப்படுகிறது.
விமானத்தில் ராமானுஜர் இங்கு வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற ராமானுஜர் வந்தார். 'யார் நீ ?' என்று கேட்க, 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார்.
வீட்டுக்குள் இருந்தபடியே நம்பி, 'நான் செத்த பின் வா!' என்றார். புரியாத ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டார். இப்படி 17 முறை வந்தும், அதே நிலை தான் தொடர்ந்தது. 18ம் முறை ராமானுஜர், 'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்று சொல்ல, நம்பி அவரை சீடராக ஏற்று 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை உபதேசித்தார். ''ராமானுஜா இதைச் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் இதை பிறரிடம் சொன்னால் உனக்கு நரகம் தான் கிடைக்கும்' என்று எச்சரித்தார். ஆனால், ராமானுஜர் கோவில் விமானத்தின் மீது ஏறி, அந்த மந்திரத்தை ஊரறியச் சொன்னார். இதை நம்பி கண்டித்தார்.
''குருவே! நான் ஒருவன் நரகம் போனாலும், ஊரார் சொர்க்கம் போவார்களே!' என்று நம்பியிடம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கோவில் விமானத்தில் ராமானுஜர் சிலை உள்ளது.
வெள்ளி உற்ஸவர்: கருவறையில் மூலவர் சவுமிய நாராயணருடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன். மது, கைடபர் என்ற அரக்கர்கள், இந்திரன், புரூருப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, சந்தான கிருஷ்ணர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இரண்யனை பெருமாள் வதம் செய்யும் வரை, இத்தலத்தில் தங்கிய இந்திரன், தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரின் வெள்ளிச்சிலையை கதம்ப மகரிஷிக்கு வழங்கி வழிபடச் செய்தான். அந்தச்சிலையே இங்கு உற்ஸவராக உள்ளது. பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
மகாமக கிணறு: புரூருப சக்கரவர்த்திக்காக தோன்றிய மகாமக கிணறு கோவிலில் உள்ளது. 12ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாமகநாளில் இந்த கிணற்றின் முன்பு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். இந்தக்கோவிலின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்) முதல் தளத்தில் சவுமிய நாராயணர் (பாற்கடல் பெருமாள்), இரண்டாம் தளத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் தளத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என நான்கு கோலத்தில் வீற்றிருக்கின்றனர். தாயார் திருமாமகளுக்கு தனி சன்னிதி உள்ளது. நிலமாமகள், குலமாமகள் என்றும் இவளுக்குப் பெயருண்டு.
இருப்பிடம் : மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் திருக்கோஷ்டியூர்.
நேரம்: காலை 6:00 - மதியம் 12:00, மாலை 4:00 - இரவு 8:00 மணி
அலை/தொலைபேசி: 94862 32362, 04577 - 261 122

