/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
/
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ADDED : பிப் 24, 2017 10:29 AM

* விதியை மட்டும் நம்பும் ஏமாளிகள், எதையும் வாழ்வில் சாதிக்க மாட்டான். முயற்சி உடையவன் அறிவால் வெல்லும் ஆற்றல் பெற்றிருப்பான்.
* மலரில் மணமும், விறகில் தீயும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும் இருப்பது போல, உலகிலுள்ள எல்லா உயிர்களிலும் கண்ணுக்கு தெரியாமல் கடவுள் வீற்றிருக்கிறார்.
* மனதை அடக்கியாளத் தெரிந்தவனுக்கே நாட்டையும் ஆட்சி செய்யத் தெரியும். நற்பண்பு கொண்டவனுக்கே மனதைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டாகும்.
* மகிழ்ச்சியில் மட்டுமில்லாமல் துன்பம் நேரும் போதும் உடனிருப்பவனே நல்ல நண்பன். தகுதியான நல்ல நண்பர்களுடன் நட்பு கொள்வது மிக அவசியம்.
* ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை விட உயிரை விடுவது மேலானது.
* சோம்பல் இருக்குமிடத்தில் முன்னேற்றம் இருக்காது.
* தைரியம் உள்ளவனையே அதிர்ஷ்டம் தேடி வரும். ஆனால், அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பிக் கொண்டு, உழைக்காமல் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது.
* சரியான திட்டமிடுதலே பணியை எளிதாக்கும். உள்ளத்தில் உறுதியும், காலத்தின் அருமையும் அறிந்தவன் எந்த பணியையும் நிறைவேற்றும் வலிமை படைத்தவனாக இருப்பான்.
* தீய சொற்கள் நெருப்பை விட தீமையை உண்டாக்கும்.
* பின்விளைவைச் சிந்திக்காமல் செயல்படக்கூடாது. ரகசியமான விஷயங்களையும், கசப்பான உண்மைகளையும் அனைவரிடமும் சொல்லக் கூடாது.
* தனக்குப் பிறர் செய்த சிறிய உதவியையும் பெரிதாக மதிப்பவனே உயர்ந்த மனிதன். பகைவனாக இருந்தாலும் பிறரது வயிற்றுப் பிழைப்பைக் கெடுப்பது கூடாது.
* பிறர் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுபவனே நல்லமனிதன். துன்பம் வரும் போது வருந்திப் பயனில்லை. அதைப் போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
* இரவு தூங்கச் செல்லும் முன் அன்றைய நாள் செய்த பணிகளைச் சிந்திக்க வேண்டும். குறைகளை திருத்திக் கொள்ளவும், நிறைகளை பின்பற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
* குளத்தில் நீர் வற்றினால் பறவைகள் பறந்து விடும். அது போல மனிதன் சுயநலத்துடன் இருக்கக் கூடாது. துன்பம் நேரும் போது உடன்இருப்பவர்களைக் காப்பாற்ற முயலவேண்டும்.
* நீரை விட்டு பாலை மட்டும் உறிஞ்சும் அன்னப்பறவை போல மனிதன் நல்லதைப் பின்பற்றவும், தீமையைத் தவிர்க்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
* பெரிய மனிதர்களிடம் உள்ள சிறிய தவறுகளைப் பொருட்படுத்த வேண்டாம்.
* கடந்தகாலம் குறித்து கவலைப்படாதீர்கள். எதிர்காலம் குறித்த பயமும் வேண்டாம். நிகழ்காலத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுபவனே புத்திசாலி.
* புதிய முயற்சியில் ஈடுபடும் போது அதை பிறருக்கு சொல்ல வேண்டாம். செயல் முடியும் வரை அதை வெளிப்படுத்தாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
* உணவு, பணம், குடும்பவாழ்க்கை மூன்றிலும் இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளுங்கள். படிப்பு, வழிபாடு, தானம் மூன்றிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
சொல்கிறார் சாணக்கியர்

