ADDED : டிச 30, 2016 11:10 AM

2017ம் ஆண்டின் கூட்டுத்தொகை எண் ஒன்று. இதற்குரிய தெய்வம் சூரியன். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் தனிக்கோவில் உள்ளது. ஞாயிறன்று இங்கு வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் ஆனந்தமான வாழ்வு உண்டாகும்.
தலவரலாறு: காலவ முனிவருக்குத் தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய நவக்கிரகங்களை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனை அறிந்த பிரம்மா கிரகங்களிடம், “உயிர்களின் பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பலன் அளிப்பது தான் உங்களின் கடமை. அதை மீறி காலவ முனிவருக்கு நோய் தீர்த்ததால், அத்தொழுநோய் உங்களைப் பீடிக்கட்டும்” என்று சாபமிட்டார். இதற்கு விமோசனம் வேண்டிய நவக்கிரக நாயகர்கள் பூலோகத்திலுள்ள வெள்ளெருக்கு வனத்திற்கு வந்தனர். சிவனை நோக்கித் தவமிருந்தனர். அவரருளால் நோய் தீரப்பெற்றனர். அந்த இடத்தில் நவக்கிரக நாயகர்களுக்கு கோவில் அமைக்கப்பட்டது. இங்கு மூலவராக சூரியன் வீற்றிருக்கிறார். இத்தலத்திற்கு சூரியனார் கோவில் எனப்பெயர் ஏற்பட்டது.
தேவியருடன் சூரியன்: இந்தியாவில் இரண்டு தலங்களில் சூரியக்கோவில் உள்ளது. வடக்கே ஒடிசாவிலுள்ள கோனார்க், தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரியனார் கோவில். இதில் சூரியனார் கோவிலில் மட்டுமே வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
கருவறையில் சூரியன், செந்தாமரை மலரை ஏந்திய கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் உஷா, பிரத்யுஷா என்னும் தேவியர் அருள்பாலிக்கின்றனர். சிவாலயங்களில் நந்தி வாகனம் இருப்பது போல சூரியனுக்கு எதிரில் வாகனமான குதிரை உள்ளது. சூரியனின் உக்கிரத்தை தணிக்கும் விதத்தில் குருபகவானும் எதிரில் வீற்றிருக்கிறார். குருவின் விசேஷப் பார்வையால் உக்கிரம் தணிந்து சாந்த நிலையில் இருப்பதாக ஐதீகம்.
நவக்கிரக சன்னிதிகள்: சூரியன் கருவறையில் வீற்றிருக்க சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய மற்ற கிரகங்கள் பரிவார தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். எல்லா கிரகங்களும் அனுகிரக நிலையில் இங்கிருப்பது சிறப்பு. சூரியனைத் தவிர மற்றவர்களுக்கு வாகனம் இல்லை. விநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. தலவிருட்சமாக எருக்கு இருக்கிறது.
சூரியதீர்த்தம் இங்குள்ளது. ஞாயிறு தவிர ஆடி கடைசி செவ்வாய், ஆவணி ஞாயிறு, கார்த்திகை சோமவாரம், தை அஷ்டமி, மாசி சிவராத்திரி, தைப்பொங்கல் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. திருமணத்தடை நீங்கவும், நோய் விலகி உடல்நலம் பெறவும் இங்கு நவக்கிரக ஹோமம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் திருமங்கலக்குடி. அங்கிருந்து 2 பர்லாங் நடந்தால் சூரியனார் கோவில்.
நேரம்: காலை 6:00 - 11:00, மாலை 4:00 - இரவு 8:00 மணி
தொலைபேசி: 0435 - 2472349

