/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தானம் செய்ய பொருளில்லையா! இருக்கவே இருக்கிறது புண்ணியம்
/
தானம் செய்ய பொருளில்லையா! இருக்கவே இருக்கிறது புண்ணியம்
தானம் செய்ய பொருளில்லையா! இருக்கவே இருக்கிறது புண்ணியம்
தானம் செய்ய பொருளில்லையா! இருக்கவே இருக்கிறது புண்ணியம்
ADDED : மார் 10, 2017 12:37 PM

'என்னிடம் தானம் செய்ய பொருள் ஏதுமில்லையே என்று வருந்துகிறீர்களா! அதற்கு அவசியமே இல்லை. நீங்கள் இதுவரை செய்த சிறுசிறு நற்செயல்களுக்குரிய புண்ணியத்தை மகம் மற்றும் சித்திரை நட்சத்திர நாட்களில் கும்பகோணம் சக்கரபாணியிடம் அர்ப்பணித்தால் போதும்.
தல வரலாறு: பாதாள உலகில் வசித்த ஜலாந்தராசுரன் என்பவன், முனிவர்களுக்கு துன்பம் தந்தான். அவனை அழிக்க திருமால், தன் சக்கரத்தை ஏவினார். அது பாதாளத்துக்குள் புகுந்து, அசுரனை அழித்து விட்டு, காவிரி நதிக்கரையில் ஓரிடத்தில் பூமியை பிளந்து வெளியே வந்தது. புண்ணியத் தலமான கும்பகோணத்தில் யாகம் செய்த பிரம்மா அந்த சக்கரத்தை காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தார். ஒளி மிக்க சக்கரத்தைக் கண்ட சூரியன், அதற்கு இணையாக தன் ஒளியை அதிகரிக்கத் தொடங்கினான். இதனால் கோபமடைந்த சக்கரம், சூரியனின் ஒளியைத் தன்னுள் இழுத்துக் கொண்டது. ஒளியிழந்த சூரியன் மீண்டும் ஒளி பெற, சக்கரத்தைச் சரணடைந்தான். அப்போது மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிமயமான கேசத்துடன் ஸ்ரீசக்கர ராஜராக பெருமாள் காட்சியளித்து சூரியனுக்கு ஒளி கொடுத்தார். இந்த நன்றிக்காக சூரியன் இங்கு சக்கரபாணி கோவிலைக் கட்டினான். பிற்காலத்தில் சோழர் மன்னர்கள் திருப்பணி செய்தனர்.
சக்கர ராஜருக்குள் அடக்கம்: மகம், சித்திரை நட்சத்திர நாட்களில் மகாமக குளத்திலும், காவிரி நதியிலும் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். இந்த புண்ணிய பலனை சக்கரபாணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது மரபு. ஆயினும் இந்த புண்ணிய பலன் வீண் போகாது. இதை டெபாசிட் போல வைத்திருக்கும் சக்கரபாணி, நமக்கு கடுமையான சோதனைக்காலம் வரும் போது அதைத் தந்தருளி காப்பாற்றுவார். சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்யலாம்.
மாசிமகத் தேரோட்டம்: இங்கு விஜயவல்லி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. கருவறை சுற்றுச்சுவரில் லட்சுமி நரசிம்மர், தும்பிக்கை ஆழ்வார், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். மாதம்தோறும் மகம், சித்திரை நட்சத்திர நாட்களில் கருடசேவை நடக்கிறது. அட்சய திரிதியை, ரத சப்தமி நாளில் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கும். மாசியில் நடக்கும் பத்துநாள் விழாவில், மாசி மகத்தன்று தேரோட்டம் நடக்கும்.
இருப்பிடம்: கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் 2 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - மதியம் 12:00, மாலை 4:00 - இரவு 8:00 மணி
தொலைபேசி: 0435 - 240 3284.

